பாபர் அஸாம் ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் 20 கோடிக்கு போவார்.
உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் 2022 டி20 தொடர் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் 10 அணிகள் 74 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ள இந்த தொடர் முழுவதும் 25% ரசிகர்களுக்கு முன்னிலையில் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.
ஏங்கும் பாகிஸ்தான்:
இந்த தொடரில் பங்கேற்கும் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் பல கோடி ரூபாய் சம்பளங்களில் விளையாடுகின்றனர். அதற்கு ஈடாக எப்போதுமே மவுசு குறையாத வெளிநாட்டு வீரர்களும் இந்த ஐபிஎல் தொடரில் வெறும் 2 மாதங்கள் விளையாடி பல கோடி ரூபாய்களை அள்ளுகின்றனர். சமீபத்தில் நடந்த அண்டர்-19 உலக கோப்பையில் அசத்திய ஒரு சில வீரர்கள் கூட லட்சங்கள் முதல் கோடிகள் வரை வாங்குகிறார்கள். அதேசமயம் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமரும் வீரர்கள் கூட அசால்ட்டாக 2 மாதங்களில் கோடீஸ்வரர்களாக மாறிவிடுகின்றனர்.
அப்படிப்பட்ட கோடிகள் புரளும் இந்த ஐபிஎல் தொடரில் எல்லைப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எந்த ஒரு நட்சத்திர பாகிஸ்தான் வீரரும் பங்கேற்க முடிவதில்லை. இருப்பினும் பணத்திலும் தரத்திலும் உயர்ந்து நிற்கும் ஐபிஎல் தொடர் ஒவ்வொரு முறை நடைபெறும் போதும் அதில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றால் இவ்வளவு கோடிக்கு விலை போவார்கள் இந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவார்கள் என ஆஹா ஓஹோ என்ற வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் பேசுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அசால்ட்டாக 15 – 20 கோடிக்கு போவார்:
அந்த வரிசையில் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தற்போது இணைந்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் ஏலத்தில் பாபர் அசாம் எந்தவித சந்தேகமுமின்றி 15 – 20 கோடிக்கு போவார். அதிலும் இந்தியாவின் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகியோர் ஒரே அணியில் விளையாடினால் அது மிகச் சிறப்பானதாக இருக்கும். அதிலும் வருங்காலங்களில் ஏதாவது ஒருநாள் அவர்கள் இருவரும் ஒரே ஐபிஎல் அணிக்காக தொடக்க வீரர்களாக ஒன்றாக களமிறங்குவதை பார்ப்பதற்கு எவ்வளவு நன்றாக இருக்கும்” என கூறினார்.
பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர இளம் வீரர் பாபர் அசாம் சமீப காலங்களாக அந்த அணிக்கு 3 வகையான போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு முக்கிய முதுகெலும்பு வீரராக உருவெடுத்துள்ளார். குறிப்பாக இந்தியாவின் விராட் கோலி, நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் விளையாடி வரும் அவர் பாகிஸ்தானின் முழுநேர கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். அந்த அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரராக இருக்கும் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் கண்டிப்பாக கண்ணை மூடிக்கொண்டு 15 – 20 கோடிக்கு ஏலம் போவார் என சோயப் அக்தர் கூறியுள்ளார்.
டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் தற்போதைய உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேனாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். எனவே அவர் ஐபிஎல் தொடரில் விளையாடினால் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய தொகைக்கு விலை போவார் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக 20 கோடி என்பதெல்லாம் சற்று ஓவராக உள்ளதாக இந்திய ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிகபட்சமாக விராட் கோலி இதற்கு முன் 17 கோடிகளில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். தற்போது கேஎல் ராகுல் லக்னோ அணிக்காக 17 கோடிகளுக்கு விளையாடி வருகிறார். அப்படி இந்தியாவின் உச்சபட்ச நட்சத்திரங்களாலேயே 15 கோடியை தொட முடிந்ததே தவிர 20 கோடியை இன்னும் தொடவில்லை முடியவில்லை. அப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் ஐபிஎல் தொடரில் விளையாடினால் 20 கோடிக்கு ஏலம் போவார் என சோயப் அக்தர் கூறுவது உருட்டலை போல உள்ளதாக இந்திய ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.