ரஷியாவுடனான இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடப்போவதில்லை – ஜப்பான்.
ரஷியாவின் ஷக்லின் தீவில் உள்ள கடல்பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அதிக அளவில் உள்ளது. இந்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுக்கும் திட்டத்தை ரஷிய எண்ணெய் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
ஷக்லின்-2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஜப்பான் அரசும் ரஷியாவுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த திட்டத்தில் ஜப்பானின் இரு நிறுவனங்கள் மொத்தம் 22.5 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ரஷியாவில் இருந்து ஜப்பானுக்கு இயற்கை எரிவாயு அதிக அளவில் கிடைக்கும். இந்த திட்டம் ஜப்பானின் எரிபொருள் தேவையில் கணிசமான அளவை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதையும் அமெரிக்கா நிறுத்தியது. மேலும், பல்வேறு நாடுகளையும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் ரஷியாவுடன் இணைந்து செயல்படுத்தி வரும் ஷக்லினில் இயற்கை எரிவாயு எடுக்கும் ஷக்லின்-2 திட்டத்தை ஜப்பான் கைவிட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.
ஆனால், ரஷியாவுடன் இணைந்து மேற்கொண்டு வரும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடப்போவதில்லை என்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நாட்டின் நீண்டகால எரிவாயு தேவையை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால், இந்த திட்டத்தில் இருந்து விலகும் எண்ணமில்லை என அவர் ஜப்பான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.