படைகளை விலக்கி கொள்ளும் ரஷ்யா!
உக்ரைனில் பரவலாக ரஷ்ய படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களின் புறநகர் பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டு வருகிறது. நேட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனிடையே சர்வதேச நிர்பந்தங்களுக்கு பணிந்த ரஷ்யா, மரியபோல் நகரத்தில் போர் நிறுத்தம் செய்துள்ளது. சென்னோப்பில் அணுஉலையை ஆக்கிரமித்திருந்த ரஷ்ய படைகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன.
இதனால் உக்ரைனில் குண்டு சப்தங்கள் குறைந்திருக்கும் நிலையில், ரஷ்ய படைகள் விலக்கிக்கொள்ளப்படவில்லை என்றும் இடமாற்றம் மட்டுமே செய்யப்படுவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார். இதனிடையே கீவ், கார்க்கிவ் ஆகிய நகரங்களில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டு வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் உக்ரைன் ராணுவம் அடையாள அணிவகுப்பு நடத்தி வருகிறது. போரில் உயிரிழந்து நகரெங்கும் சிதறி கிடக்கும் ரஷ்யா – உக்ரைன் வீரர்களின் உடல்களை அவர்கள் அகற்றி வருகின்றனர்.
மரியபோலில் ரஷ்ய படைகள் போர் நிறுத்தம் செய்திருக்கும் நிலையில், அங்குள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டிருக்கும் சூழலில், இரு நாடுகள் இடையே வரும் 1ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.