பயணத்தில் தொலைத்த பையை கண்டுபிடிக்க இண்டிகோ விமான இணையதளத்தை ஹேக் செய்த பொறியாளர்!
பயணத்தின்போது தொலைந்துபோன பையை கண்டிபிடிக்க பொறியாளர் ஒருவர் விமானத்தின் இணையதளத்தையே ஹேக் செய்துள்ள விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாட்னாவிலிருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் மூலம் நந்தன் குமார் என்ற மென்பொருள் பொறியாளர் பயணம் செய்துள்ளார். அப்போது, பெங்களூரு விமான நிலையித்தில், மற்றொரு பயணியிடம் இவரது பை மாறி சென்றுள்ளது. நந்தகுமார் வீட்டிற்கு சென்ற பிறகுதான், பை மாறி போனது தெரியவந்துள்ளது. பின்னர், நீண்ட நேர காத்திருப்புக்கு மத்தியில் இண்டிகோ வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்களிடம் தனது பை மாறியது குறித்த தகவல்களை எடுத்துக் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இண்டிகோ நிறுவனம் தரப்பிலும், அந்த வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். எனினும், அவர் அழைப்பு ஏற்கவில்லை என்று தெரிகிறது. மேலும், அந்த நபரின் விவரங்களை தனக்கு தந்து உதவுமாறு அவர் இன்டிகோ நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளார். எனினும், தரவு பாதுகாப்பு, தனியுரிமையை காரணம் காட்டி அந்த பயணியின் விவரங்களை தர மறுத்துள்ளனர்.
மேலும், மீண்டும் அவரை தொடர்பு கொள்வோம் என இண்டிகோ வாடிக்கையாளர் பராமரிப்பு மையம் உறுதி அளித்து அழைப்பை துண்டித்துள்ளது. இருந்த போதிலும், சொன்னபடி அவர்கள் மீண்டும் தொடர்பு கொள்ளவே இல்லை. தனது பிரச்னைக்கு நிறுவனம் எந்த தீர்வும் காணவில்லை. இதைத்தொடர்ந்து, தான் பிரச்னையை தானே தீர்த்துக்கொள்ள அவர் களமிறங்கியுள்ளார்.
அதன்படி, சக பயணியின் பையில் இருந்த பிஎன்ஆர் விவரங்கள் மூலம் இண்டிகோ இணையதளத்தை ஆராய்ந்து, வருகை பதிவை பதிவு செய்தல், முன் பதிவை திருத்துதல், விவரங்களை புதுப்பித்தல் என பல முறைகளை கையாண்டுள்ளார். எனினும், அவரின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக, இணையதளத்தை உருவாக்குபவரின் கட்டுப்பாட்டு தளத்திற்கு சென்று பயணிகளின் வருகை பதிவை ஆராய்ந்து, கடைசியாக, பையை எடுத்து சென்ற பயணியின் இ-மெயில் மற்றும் தொடர்பு எண்ணை கண்டுபிடித்துள்ளார். பின்னர், அவரை தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து பையை மாற்றி கொண்டுள்ளார்.
இதுகுறித்து நந்தன் குமார் தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளார். இது வைரலான நிலையில், இதற்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம், ரகசியமான தரவுகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம், நந்தன் குமார் இணையதளத்தை ஹேக் செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளது.