உள்ளக விசாரணையை நாம் கோரவே இல்லை! – சுமந்திரன் எம்.பி. விளக்கம்.
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பில் நாம் உள்ளக விசாரணையைக் கோரவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் பிரகாரம் சர்வதேச ஒத்துழைப்பைப் பெறலாம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“உள்ளக விசாரணை என்று நாங்கள் சொல்லவே இல்லை. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுகளில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை நீங்கள் பார்த்தீர்களாக இருந்தால், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என்று தான் சொல்லியிருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகச் சட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கே நடத்தப்படுகின்ற விசாரணைகளில் சர்வதேச நிபுணர்களும் பங்குபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, அந்த அலுவலகத்தினூடாக நடத்தப்படுகின்ற விசாரணையாக இருக்கலாம் அல்லது வேறு ஒரு பொறிமுறையாக இருக்கலாம்.
இந்த விசாரணை சம்பந்தமாக அவர்களுக்குள்ளேயே இரு நிலைப்பாடு வந்தது.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினூடாக விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்று அமைச்சர் பீரிஸ் கூறினார். தென்னாபிரிக்காவின் உதவியோடு நாங்கள் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குகின்றோம். அதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று சொன்னார்கள்.
இந்த இரண்டிலும் சர்வதேச ஈடுபாடு இருக்கின்றது. ஆகையால் விசாரணை வேண்டும் என்று நாங்கள் கோரியதற்கு அரசு இணங்கியமையை வைத்துக்கொண்டு உள்ளக விசாரணைக்காக நாங்கள் கோரிக்கை வைத்தோம் என்று சொல்வது எந்தவிதத்திலும் நியாயமான கூற்று அல்ல” – என்றார்.