பணப் பரிமாற்று நிலையத்தின் அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இரத்துச் செய்ய மத்திய வங்கி.
வெளிநாட்டு அந்நிய செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கி வந்த பணப் பரிமாற்று நிலையத்தின் அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இரத்துச் செய்ய இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இன்று முதல் இந்த தற்காலிக நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அந்நிய செலாவணிகளுக்கு மேலதிக ரூபாய் செலுத்தப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து மத்திய வங்கியின் வெளிநாட்டு அந்நிய செலாவணி திணைக்களம் நேற்று சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணைகளை நடத்தியுள்ளது.
இந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்ட பணப் பரிமாற்று நிலையம், அனுமதிப் பெற்ற வங்கிகளின் கொள்முதல் விலையை விட அதிக விலையில் வெளிநாட்டு நாணயங்களை கொள்முதல் செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பணப் பரிமாற்று நிலையத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இன்று நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த நிறுவனம் அனுமதிப் பெற்ற பணப் பரிமாற்று வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட மாட்டாது.
அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் அந்த நிறுவனத்துடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல்கள் வெளிநாட்டு அந்நிய செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கை எனக் கருதப்படும்.
அதேவேளை பணப் பரிமாற்றும் அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள நிறுவனங்கள் நடத்தி வரும் இடங்களில் விசாரணைகளை நடத்துவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி சட்டத்தை மீறி கொள்முதல் , விற்பனையில் ஈடுபடும் பணப் பரிமாற்று நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.