திருப்பி அடிக்கத் தொடங்கியதா உக்ரைன்? ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது குண்டுவீச்சு.

போரை தீவிரப்படுத்த திட்டமிட்டு பொய் * புடின் மீது மேற்கத்திய நாடுகள் சந்தேகம்

கீவ்: உக்ரைன் எல்லையை ஒட்டிய ரஷ்யாவின் எரிபொருள் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்கள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டி உள்ளது. இதை உக்ரைன் ராணுவம் உறுதிபடுத்தாத நிலையில், போரை மேலும் தீவிரப்படுத்த அதிபர் புடின் கூறும் பொய்யாக இது இருக்கலாம் என மேற்கத்திய நாடுகள் சந்தேகம் தெரிவித்துள்ளன.உக்ரைனில் ஒரு மாதத்திற்கு மேலாக போர் தொடுத்து வரும் ரஷ்ய ராணுவம், துருக்கியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் படைகளை குறைத்துக் கொள்வதாக உறுதி அளித்தது. ஆனால், இந்த வாக்குறுதியை மீறி அடுத்த நாளே தலைநகர் கீவ் புறநகர்களில் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதனால், தங்களை தற்காத்துக் கொள்வதோடு நிற்காமல், எதிர்த்து தாக்குதல் நடத்த உலக நாடுகள் ஆயுத உதவி செய்ய வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று காலை 5.43 மணி அளவில், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அரசுக்கு சொந்தமான எரிபொருள் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைனின் ராணுவ ஹெலிகாப்டர்கள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அம்மாகாண ஆளுநர் கிளாட்கோவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மில் எம்ஐ-24 ரக ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட எரிபொருள் சேமிப்பு கிடங்கு பகுதியில் மிக தாழ்வாக பறந்து செல்வதாக காட்டப்பட்டுள்ளது. 2 ஹெலிகாப்டர்கள் மூலம் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாகவும், இதில் 2 பேர் காயமடைந்ததாகவும் ஆளுநர் கிளாட்கோவ் கூறி உள்ளார்.ஆனால், இத்தகவலை உக்ரைன் ராணுவம் உறுதி செய்யவில்லை. தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஹெலிகாப்டர்கள் குடியிருப்பு பகுதியில் வெளிச்சமில்லாத அதிகாலை வேளையில் ரேடாரில் இருந்து தப்ப மிக தாழ்வாக பறந்து செல்கின்றன. தாக்குதல் நடந்த இடம் கார்கிவ் நகரில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் மில்லிரோவோ ராணுவ தளத்தின் மீது உக்ரைன் ராணுவம் குண்டுவீசி தாக்கியதாக கூறப்பட்டது. இதன் மூலம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியது போல், அந்நாடு ரஷ்யாவில் புகுந்து பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.அதே சமயம், இது ரஷ்ய அதிபர் புடினின் சதித்திட்டம் என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி உள்ளன. ரஷ்யாவில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, போரை மேலும் தீவிரப்படுத்த புடின் நடத்தும் நாடகம் என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன. அதற்கு ஏற்றார் போல், உக்ரைனில் போரை தீவிரப்படுத்த ரஷ்யா காய் நகர்த்தி வருகிறது என்றும் அவை கூறியுள்ளன.

இனிமேல் போர் ஓயாது
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், ‘‘நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறுவது என்பது தென்கிழக்கில் புதிய சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு அவர்கள் திட்டமிடும் ராணுவ தந்திரமாகும். அவர்களின் நோக்கங்களை நாங்கள் அறிவோம். எங்களுக்கு கடினமாக இருக்கும் மற்ற பகுதிகளில் கவனம் செலுத்துவதற்காக அவர்கள் விலகிச் செல்கிறார்கள். போர் இனியும் ஓயாது’’ என்றார்.

செர்னோபிள்ளில் இருந்து ரஷ்ய படைகள் ஓட்டம்
போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட செர்னோபிள் நகரில் இருந்து ரஷ்ய படைகள் நேற்று அதிகாலை முழுமையாக வெளியேறின. அங்கு நாட்டின் மிகப்பெரிய அணுமின் நிலையம் அமைந்துள்ளது. ரஷ்ய படைகள் செர்னோபிள் நகரை சுற்றி வளைத்ததும், அணு மின் நிலையத்தை சுற்றிய பகுதிகளில் பதுங்கு குழி வெட்டி உள்ளனர். இதன் காரணமாக கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டு, ரஷ்ய வீரர்கள் பாதிக்கப்பட்டதாகவும், இங்கிருந்தால் விபரீதம் நிகழும் என அஞ்சிய அவர்கள் வெளியேறுவதாகவும் உக்ரைன் அரசின் மின் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.

போரை பெரிதாக்கும் அமெரிக்கா: – சீனா குற்றச்சாட்டு
சீன வெளியுறவு தகவல் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உக்ரைன் போரை தூண்டி விட்டதே அமெரிக்காதான். போரையும் நாளுக்கு நாள் ஊதி பெரிதாக்கி வருகிறது. உக்ரைன் போரின் முதல் குற்றவாளியே அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும்தான். சோவியத் யூனியன் உடைந்ததுமே நேட்டோவை அமெரிக்கா கலைத்திருக்க வேண்டும். 1999 முதல் கடந்த 20 ஆண்டுகளில் உலகின் கிழக்கு பகுதியில் ஆயிரம் கிமீ.க்கு, ரஷ்யாவின் எல்லை வரையில் நேட்டோ விரிவாக்கம் செய்துள்ளன. இந்த அமைப்பில் 16 நாடுகள் இருந்த நிலையில், இப்போது 30 நாடுகள் உள்ளன,’’ என்றார்.

தினமும் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் விடுவிப்பு: – விலையை கட்டுப்படுத்த பைடன் அறிவிப்பு
உக்ரைன் போரால், ரஷ்யாவின் எரிபொருள் சப்ளை தடை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, உலகெங்கிலும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்து வருகிறது. இதில் அமெரிக்காவும் தப்பவில்லை. அமெரிக்காவில் வரும் நவம்பரில் இடைக்கால தேர்தல் நடக்க உள்ள நிலையில், எரிபொருள் விலை உயர்வு அரசியல் ரீதியாக அதிபர் ஜோ பைடனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த, அமெரிக்கா தனது கையிருப்பில் உள்ள எரிபொருள் சேமிப்பில் இருந்து நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை அடுத்த 6 மாதத்திற்கு விடுவிக்கும் என பைடன் அறிவித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்காவில் எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலம், கையிருப்பு சேமிப்பில் இருந்து 180 பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்கா விடுவிக்க உள்ளது. கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பேரல்களை அமெரிக்கா விடுவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவுக்கு ‘வால்’ ஆட்டிய 2 தளபதிகள் பதவி பறிப்பு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ராணுவ உறுதிமொழியை மீறியதாக 2 ராணுவ தளபதிகளின் பதவியை பறித்து நேற்று உத்தரவிட்டார். அவர் வெளியிட்ட வீடியோவில், ‘‘உக்ரைன் உளவுத்துறை அமைப்பான எஸ்பியுவின் உள்நாட்டு பாதுகாப்பு தலைமை தளபதி, கெர்சன் பிராந்திய உளவுத்துறை தலைவர் ஆகியோர் தங்களின் தாய்நாடு எது என்பதை தீர்மானிப்பதில் குழப்பம் அடைந்துள்ளனர். உக்ரைன் மக்களுக்கு விசுவாசமாக இருப்போம் என்ற ராணுவ உறுதிமொழியை அவர்கள் மீறியதால் அவர்களின் பதவி பறிக்கப்படுகிறது,’’ என்றார். இவர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஜெலன்ஸ்கி இந்த முடிவை எடுத்ததாக, மறைமுகமாக கூறியுள்ளார்.

மீண்டும் பேச்சுவார்த்தை
துருக்கியின் இஸ்தான்புல்லில் உக்ரைன், ரஷ்யா சிறப்பு பிரதிநிதிகள் சமீபத்தில் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முக்கிய முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் காணொலி மூலமாக இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.

கீவ், செர்னிவ்வில் படைகள் குறைப்பு
செர்னோபிள் போலவே, தலைநகர் கீவ் பிராந்தியத்தின் வடக்கு பகுதியில் இருந்தும், செர்னிவ் நகரில் இருந்தும் ரஷ்ய படைகள் நேற்று வாபஸ் பெறப்பட்டன. மேற்கு உக்ரைனில் தொடர்ந்து ரஷ்ய படைகள் குறைக்கப்பட்டு அவை அனைத்தையும் கிழக்கு உக்ரைனுக்கு அனுப்பி அங்கு முழுமையான தீவிர போரில் ரஷ்யா களமிறங்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, மரியுபோலில் மனிதநேய பாதை வழியாக மக்களை வெளியேற்ற முயன்ற 45 பஸ்களை ரஷ்ய வீரர்கள் நேற்று தடுத்து நிறுத்தினர்.

கவச வாகனம் அனுப்பும் ஆஸி.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது ஆயுதங்களை வழங்கும்படி வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஆஸ்திரேலியா உடனடியாக ஏற்றுக் கொண்டு, அந்நாட்டின் சிறப்பு தயாரிப்பான புஷ்மாஸ்டர் கவச வாகனத்தை அனுப்புவதாக உறுதி அளித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் அளித்த பேட்டியில், ‘‘எங்கள் பிரார்த்தனைகளை மட்டுமல்ல, ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிபொருட்கள், மனிதாபிமான உதவிப்பொருட்கள், எங்களின் பிரத்யேக கவச வாகனங்கள் என அனைத்தையும் உக்ரைனுக்கு வழங்குகிறோம். போயிங் சி-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானம் மூலம் உதவிப்பொருட்கள் அனுப்பப்படும்’’ என்றார். இதே போல், காமிகேஸ் எனும் அதிநவீன டிரோன்களையும், பீரங்கி உள்ளிட்ட ஆயுத உதவிகளை வழங்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.