ராஜபக்ச அரசு தோல்வி! – ரணில் சாடல்
மக்களின் அமைதிப் போராட்டங்கள் வன்முறையாக உருவெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மக்களின் பிரச்சினைகளுக்குச் செவிசாய்த்து அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் ராஜபக்ச அரசு தோல்வியைச் சந்தித்துள்ளது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் விளக்கமளித்து அவர் வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் அரசு தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சியும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
அமைதிப் போராட்டங்களில் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது. அதேபோன்று வன்முறைக்கும் இடமளிக்கக்கூடாது. மக்களின் போராட்டங்களில் அரசியல் கட்சிகள் பங்குப்பற்றக்கூடாது.
காலம் கைமீறிப் போயிருந்தாலும் தற்போது நாடாளுமன்றத்துக்கும் பொறுப்பு இருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இது தொடர்பில் பேசப்பட வேண்டும்.
எமது பிரச்சினைகளை வன்முறைகளின்றி நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும்” – என்றுள்ளது.