திருப்பத்தூரில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கோவிலுக்கு சென்ற வாகனம்- ஒரே ஊரைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தை சேரந்த 28 பேர் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய டாடா ஏஸ் வாகனம் மூலம் சென்றனர். அப்போது வாகனம் தனது கட்டுபாட்டை இழந்து 50அடி பள்ளத்தில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
மேலும் பலத்த படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோரை அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சுகந்தா(55), துர்கா(40), பரிமளா(12), பவித்ரா(18), செல்வி(35), மங்கை(60) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராம காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி ஜெயப்பிரியா(16) மற்றும் சின்னதிக்கி(35) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். திருப்பத்தூர் அருகே மலைப் பகுதி கோயிலுக்கு சென்ற டாட்டா ஏஸ் வாகனம் மலை மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே ஊரை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சம்பவம் குறித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா விபத்தில் சிக்கியவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.