2 ஆண்டுகளுக்குப்பின் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா
உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா 2 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற உள்ளதால் திருநங்கைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மகாபாரதப் போரில் வெற்றிபெற அரவான் என்ற இளவரசனை பஞ்ச பாண்டவர்கள் பலிகொடுத்த வரலாற்றை நினைவுகூரும் வகையில் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் பகுதியில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் திருநங்கைகள் விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடக்காமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா, வரும் 5ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலிக் கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி 19ஆம் தேதியும், அதற்கு அடுத்த நாளில் கூத்தாண்டவர் தேரோட்டம் மற்றும் திருநங்கைகள் விதவைக் கோலம் ஏற்கும் நிகழ்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு மிஸ் கூவாகம் போட்டி, ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களுக்கு தேவையான குடிநீர், தங்குமிடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.