தூக்க கலக்கத்தில் 2-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த வடமாநில இளைஞர் – போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே, காலில் கம்பி குத்தி அந்தரத்தில் தொங்கியப்படி உயிருக்கு போராடிய வடமாநில இளைஞர், நீண்ட போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் இங்குள்ள தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே பொடவூர் கிராமத்தில் பாதியில் கைவிடப்பட்ட இரண்டடுக்கு கட்டடத்தின் காவலாளியாக வட மாநிலமான அசாமை சேர்ந்த பிரேம் 27 என்பவர் வேலை செய்து வரும் நிலையில்
நேற்று முன்தினம் தனது பணியை முடித்து விட்டு வழக்கம் போல் இரண்டாவது மாடியில் துாங்கியுள்ளார்.
அப்போது தூக்க கலக்கத்தில் எதிர்பாராத விதமாக அவர் உருண்டப்போது இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது முதல் மாடியில் நீட்டிக்கொண்டிருந்த கட்டுமான கம்பியானது பிரேமின் இடது கால் தொடையின் ஒரு புறம் குத்தி மறுபுறம் கம்பி வெளியேறியதால் அவர் அந்தரத்தில் தலைக்கீழாக தொங்கியபடி செய்வதறியாது வலியால் துடிதுடித்துள்ளார்.
இதனைக்கண்ட அருகிலிருந்தவர்கள் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததன். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் தீயணைப்புத்துறையினத் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பிரேமை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் பல மணி நேரத்திற்கு மேலாக போராடி கட்டர் இயந்திரம் மூலமாக அவரது தொடையில் குத்திய இருந்த கம்பியை துண்டித்து பிரேமை பத்திரமாக மீட்டெடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரேமின் தொடையில் குத்தியிருந்த கம்பியை வெற்றிகரமாக அகற்றினர்.
இரண்டாவது மாடியில் இருந்து தூக்க கலக்கத்தில் உருண்டு விழுந்து தொடையில் கம்பி குத்தி அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய வடமாநில இளைஞரை உரிய நேரத்தில் போராடி மீட்டெடுத்த தீயணைப்புதுறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.