”இலங்கை கடற்படை கைது செய்த 12 தமிழக மீனவர்களை அரசு விரைந்து மீட்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

”இலங்கை கடற்படை கைது செய்த 12 தமிழக மீனவர்களை அரசு விரைந்து மீட்க வேண்டும்” என்று பாமக இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவில், ‘வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மார்ச் 29-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 5 நாட்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களையும் சேர்த்து இந்த வாரத்தில் மட்டும் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் கைதுகளை அனுமதிக்கக்கூடாது. மீனவர் சிக்கலுக்கு தீர்வு காண அண்மையில் இரு நாட்டு கூட்டு பணிக்குழுக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் மீனவர்கள் மீது கடுமை காட்டக்கூடாது என இந்தியா கூறிய பிறகும் கைது தொடர்வது நியாயமல்ல.
இதையும் படிங்க – ‘தம்பி ஸ்டாலின் நினைத்தால் ஒரே வாரத்தில் செய்ய முடியும்…’ : வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.