‘பேரழிவை தவிர்த்துக்கொள்ளுங்கள்’ – தென் கொரியாவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை.
வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆனாலும் கூட, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளபோதும், அது தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்தவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த நாடு ‘ஐ.சி.பி.எம்.’ என அழைக்கப்படுகிற கண்டம் விட்டு கண்டம் பாய்கிற வல்லமை கொண்ட ஏவுகணையை சோதித்து அண்டை நாடுகளையும், அமெரிக்க வல்லரசையும் அதிர வைத்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய சோதனையை இப்போதுதான் வடகொரியா நடத்தி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் உள்ள ஏவுகணை செலுத்தும் மையத்துக்கு அந்த நாட்டின் ராணுவ மந்திரி சூ ஊக் சென்றபோது வடகொரியாவின் ஏவுகணை சோதனையை காட்டமாக விமர்சித்தார். அப்போது அவர், “தென்கொரியா மீது வடகொரியா ஏவுகணைகளை ஏவுவதற்கு திட்டம் எதுவும் வைத்திருந்தால், அந்த நாட்டின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கான திறனும், தயார் நிலையும் தென் கொரியாவுக்கு இருக்கிறது” என்று கூறினார்.
இந்த வார்த்தைகள் வடகொரியாவை அதிரவைத்துள்ளது. குறிப்பாக, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் நேற்று தென் கொரியாவை கடுமையாக எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு நாட்டைப்பார்த்து, அழுக்கு நுரை போன்ற ஒருவர் முன் எச்சரிக்கை விடுப்பது விவேகம் இல்லாதது ஆகும். தென்கொரியா அதன் ராணுவ மந்திரியின் பொறுப்பற்ற கருத்துகளுக்கு எதிராக ஒரு தீவிர அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும். பேரழிவை தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால் தென் கொரியா தன்னை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
வட கொரிய ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியில் இந்த கிம் யோ ஜாங்தான் தென் கொரியா மற்றும் அமெரிக்கா தொடர்பான விஷயங்களில் பொறுப்பு அதிகார மையம் ஆவார். இவர்தான் வடகொரியாவில் தலைவர் கிம் ஜாங் அன்னிற்கு அடுத்த 2-ம் இடம் வகிக்கிறார் என்று தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறுகிறது.
கிம் யோ ஜாங்கைப் போன்று தொழிலாளர் கட்சியின் செயலாளர் பாக் ஜாங் சோனும் தென் கொரியாவை எச்சரித்துள்ளார்.
இதையொட்டி அவர் கூறும்போது, “ வடகொரியாவை தென்கொரியா முதலில் தாக்கினால், சியோல் மற்றும் தென்கொரிய ராணுவத்தின் முக்கிய இலக்குகளை அழிப்பதற்கு ராணுவ சக்தியை கருணையின்றி வட கொரியா கட்டளையிடும் ” என எச்சரித்தார். இந்த பிரச்சினையால் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.