சொந்த முயற்சியில் தனியாக அருங்காட்சியகத்தை அமைத்த காஷ்மீரி பெண்!
காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள சோபோர் நகரைச் சேர்ந்தவர் அடிகா பனோ. தனது 77ஆவது வயதில், கடந்த 2017ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பால் இவர் உயிரிழந்தார். தன் வாழ்நாளில் பெரும் முயற்சிகளுக்கு இடையே, 5,000 கலைபொருட்களை சேமித்து தனியாக அருங்காட்சியகத்தை நிறுவியவர் ஆவார்.
சோபோர் நகரிலேயே அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் காஷ்மீரின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றன. சமுதாயத்திற்கு மாபெரும் கலை பொக்கிஷத்தை வழங்கிச் சென்ற அடிகா பனோவின் உடல், அவரது விருப்பத்தின் பேரில் அருங்காட்சியக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டு விட்டது.
2022ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களிலேயே ஜம்மு – காஷ்மீருக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இதேபோன்று, நீங்களும் காஷ்மீருக்கு சுற்றுலா செல்கிறீர்கள் என்றால், சோபோர் நகரில் அடிகா பனோ அமைத்துள்ள மீராஸ் மஹால் அருங்காட்சியகத்தை பார்வையிடலாம்.
இயல்பாகவே, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் மீது தீராத ஆர்வம் கொண்ட அடிகா பனோ, ஜம்மு – காஷ்மீர் அரசின் கல்வித் துறையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 1998ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு காலத்தில் காஷ்மீரில் உள்ள குக்கிராமங்கள் பலவற்றுக்கு நேரில் பயணம் செய்து கலை பொருட்கள், ஓலைச் சுவடிகள் மற்றும் இதர பழைய பொருட்கள் ஆகியவற்றை சேமித்து வந்தார்.
சுமார் 20 ஆண்டு காலம் இவரது கலைத் தேடல் நீடித்தது. 2017ஆம் ஆண்டில் உடல்நலன் சரியின்றி முடங்கிப் போகும் வரையில் பாரம்பரிய பொருட்களை சேகரித்து கொண்டே இருந்தார். கலை பொருட்களை சேகரிப்பதற்காக வீடு, வீடாகச் சென்று விசாரிப்பதற்கு அவர் தயக்கம் காட்டியதே இல்லை.
புராதானப் பொருட்கள் வீடுகளில் இருப்பதைக் காட்டிலும், அருங்காட்சியகத்தில் இருந்தால், இன்னும் ஏராளமான மக்கள் அதுகுறித்து தெரிந்து கொள்ள முடியும் எனக் கூறி, பொதுமக்களிடம் இருந்து அதுபோன்ற பொருட்களை சேகரித்து வந்தார்.
அடிகா பனோவின் உறவினரும், அருங்காட்சியகத்தை தற்போது பராமரித்து வருபவருமான முஸமில் பஸீர் இதுகுறித்து கூறுகையில், “ஜம்மு – காஷ்மீரின் விலை மதிப்புமிக்க பாரம்பரியம் மீது அவர் பேரன்பு கொண்டிருந்தார். அரசின் முயற்சிகளுக்காக காத்திருக்காமல், லடாக் பகுதி மக்களின் புராதான சின்னங்களை பாதுகாக்க பொதுமக்கள் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்பினார்.
கடந்த 3 ஆண்டுகளில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் கடையடைப்பு போன்ற பல்வேறு இன்னல்களுக்கு இடையே, புதிய பொருட்கள் பல அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.
முன்னதாக, கொண்டல் எனப்படும் சுடுமண் பானையுடன் கடந்த 2000 ஆவது ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட குரான் வசனங்கள் உள்பட எண்ணற்ற பாரம்பரிய, கலாசாரப் பொருட்கள் இங்கு சேர்க்கப்பட்டன.