எம்பிசி தொகுப்பு மீண்டும் பிரிக்கப்படுமா?
குரலற்ற சமூகங்களை கைதூக்கிவிடும் வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.) தொகுப்பை மீண்டும் பிரிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
சமூக நீதி, இட ஒதுக்கீடு என்ற வார்த்தைகள் அதிகம் உச்சரிக்கப்படும் மாநிலம் தமிழகம்தான். சமூக நீதி, இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு தமிழகம் எப்போதும் முன்மாதிரி மாநிலமாகவே இருந்து வருகிறது. இங்குள்ள பிரதான திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக சமூக நீதி, இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்கு தாங்கள்தான் பிரதான காவலர்கள் என்பதை மையமாக வைத்துத்தான் முக்கிய அரசியல் வியூகங்கள், நகர்வுகளை எப்போதும் செய்து வருகின்றன.
இட ஒதுக்கீட்டுக்காக தமிழகத்திலிருந்து எழுந்த குரலின் அடிப்படையில்தான் சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இந்தியாவில் வேறு மாநிலத்தில் இல்லாத அளவுக்கு
தமிழகத்தில்தான் 69 சதவீத இட ஒதுக்கீடு இருந்து வருகிறது. 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட ரீதியான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்க இயலாது.
முதல் சட்டத் திருத்தம்: 1951 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு திராவிட இயக்கத்தவர்கள் இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்தாலும், பிரதமர் நேருவிடம் தனக்கு இருந்த மிக நெருங்கிய தொடர்பைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டுக்கான முதல் சட்டத் திருத்தத்துக்குக் காரணமாக இருந்தவர் அப்போதைய சென்னை ராஜதானியில் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் என்பது வரலாறு. 1963-இல் முதல்வர் பதவியைவிட்டு விலகுவதற்கு முன்பு, இந்து நாடார்களை உயர் வகுப்பிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கு காமராஜர் கொண்டு வந்தார்.
அவருக்கு அடுத்து முதல்வராக இருந்த அண்ணா காலத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் திருத்த முன்னெடுப்புகள் நடத்தப்படவில்லை. பின்னர், முதல்வராக வந்த கருணாநிதி, சட்டநாதன் குழு அடிப்படையில் 1973-இல் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதம் (16-இல் இருந்து 18 சதவீதமாக) உயர்த்தியும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்கெனவே இருந்ததைவிட 6 சதவீதம் (25-இல் இருந்து 31 சதவீதமாக) உயர்த்தியும் நடவடிக்கை எடுத்தார். மேலும், கொங்கு வேளாளக் கவுண்டர்களை உயர் வகுப்பிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கு கொண்டு வந்தார்.
திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தலின்போது, வெற்றி பெறுவதற்காக 15 சதவீத கிறிஸ்தவ நாடார்களின் ஆதரவைப் பெற, ஒட்டுமொத்த கிறிஸ்தவ நாடார்களையும் முற்பட்டோர் பட்டியலிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு கொண்டுவந்தார் எம்ஜிஆர். 1980 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், 1981-இல் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பை 31-இல் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினார்.
அழுகிய மாங்கனி: 1980 காலகட்டங்களில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் நடத்தி வந்தார். 1989-இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அம்பா சங்கர் குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைப் பிரித்து வன்னியர், இசை வேளாளர், பரதர் (மீனவர்), பர்வதராஜ குல மீனவர், வண்ணார், நாவிதர், குயவர், ஒட்டர், போயர், குரும்பக்கவுண்டர், சீர்மரபினர்களான கள்ளர், பிரமலை கள்ளர், கொண்டையங்கோட்டை மறவர், செம்பநாட்டு மறவர், வலையர், அம்பலக்காரர், வேட்டுவ கவுண்டர், தொட்டிய நாயக்கர், ஊராளி கவுண்டர் உள்பட 108 சாதிகளை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பை (எம்.பி.சி.) உருவாக்கினார்.
அப்போது, சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் கருணாநிதி, 50 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் 3 முதல் 4 சதவீத இடங்களைப் பெற்று வரும் வன்னியர்களுக்கு இனிமேல் 6 முதல் 7 சதவீத வாய்ப்புக்கு கிடைக்கும் என்றார். ஆனாலும், திருப்தியடையாத ராமதாஸ், முழு மாங்கனி கேட்ட எங்களுக்கு அழுகிய மாங்கனியை கொடுத்துவிட்டார் கருணாநிதி என விமர்சனம் செய்தார்.
ராமதாஸ் கோரிக்கை ஏற்பு: தொடர்ந்து, வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை அடுத்தடுத்து வந்த அதிமுக, திமுக அரசுகளிடம் ராமதாஸ் முன் வைத்துக்கொண்டே இருந்தார். இந்த நிலையில், கடந்த 2020, டிசம்பரில் இதே கோரிக்கையை வைத்து மீண்டும் போராட்ட அஸ்திரத்தை எடுத்தார் ராமதாஸ். தேர்தல் நேரத்தில் எழுந்த இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக நீதிபதி குலசேகரன் குழுவை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். இந்தக் குழுவின் அறிக்கை வர 6 மாத காலமாகும் என்பதால், தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 12 சதவீத உள் ஒதுக்கீடாவது வழங்க வேண்டும் என்று தனது நிபந்தனையைத் தளர்த்தினார்.
ராமதாஸின் கோரிக்கையை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் ஏற்றுக்கொண்டு வன்னியர்களுக்கு மட்டுமன்றி, பிற எம்.பி.சி. பிரிவினரும் பயனடையும் வகையில் எம்.பி.சி. தொகுப்பை மூன்றாகப் பிரித்து அதற்கான மசோதாவை சட்டப் பேரவையில் நிறைவேற்றினார்.
அதன்படி, வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர், படையாச்சி, பள்ளி, அக்னிகுல சத்திரியர் என 7 உள்பிரிவுகளை அடக்கிய வன்னியர்குல சத்திரியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் ஒரு தொகுப்பும்,
அம்பலக்காரர், பிரமலை கள்ளர், மறவர், சேர்வை, செம்பநாட்டு மறவர், ஊராளி கவுண்டர், வலையர், வேட்டுவ கவுண்டர், மீனவர் உள்பட 68 சீர்மரபினர் மற்றும் தொட்டிய நாயக்கர், வண்ணார், ஒட்டர், வலையர், போயர் உள்பட 25 எம்.பி.சி. பிரிவினர் ஆகியோருக்கு 7 சதவீத உள் ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. இதைத் தவிர இசை வேளாளர், கோவை செட்டியார் உள்பட 22 எம்.பி.சி. பிரிவினரை தனியாகப் பிரித்து 2.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது ஜாதிவாரியான கணக்கெடுப்பு வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
எம்.பி.சி. தொகுப்பு பிரிக்கப்பட்ட விவகாரம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட முறையில் வெற்றி என்ற வகையிலும், ராமதாஸýக்கு ஓரளவு வெற்றி என்ற வகையிலும் அமைந்தது. எடப்பாடி தொகுதியில் மக்களவைத் தேர்தலின்போது அதிமுக 8,000 வாக்குகள் திமுகவைவிட பின்தங்கியிருந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலில் வன்னியர் இட ஒதுக்கீடு காரணமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் 93,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், வட தமிழகம் முழுவதும் இது அதிமுகவுக்கு எதிராக வன்னியர் தவிர்த்த பிற ஜாதியினரை திருப்பிவிட்டது.
குரல்வளை நெரிக்கப்பட்ட சமூகங்கள்: எம்பிசி தொகுப்பை மூன்றாகப் பிரித்தது தமிழக அரசியல் வரலாற்றில் சமூகநீதிக்கான மற்றொரு மைல் கல் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், 7 சதவீத தொகுப்புக்குள் இருக்கும் சீர்மரபினர்களையும், அரசியல் ரீதியாக குரல் கொடுக்க ஆதரவில்லாத வலையர், வண்ணார், ஒட்டர், போயர், தொட்டிய நாயக்கர், மீனவர் போன்றவர்களையும் இந்த 7 சதவீத தொகுப்புக்குள் அடக்கியதால், அவர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2021 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலில் எம்.பி.சி. தொகுப்பில் உள்ள 7 சதவீத உள் ஒதுக்கீட்டில் அம்பா சங்கர் அறிக்கையின்படி பார்த்தால், பிரமலை கள்ளர்கள் தங்களது மக்கள்தொகை பலத்துக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு அளவை அப்படியே பெற்றனர். ஆனால், மறவர்கள்
தங்களுக்கு கிடைக்க வேண்டிய அளவைவிடக் கூடுதலாக 100 சதவீத இடங்களைப் பெற்றனர்.
அதேவேளை, வேட்டுவகவுண்டர், தொட்டிய நாயக்கர், போயர், ஒட்டர், வலையர், வண்ணார் உள்ளிட்ட சமூகத்தினர் தங்கள் பலத்தில் 30 சதவீதத்தைத்தான் பெற்றனர்.
நீதிமன்ற தடை: இதற்கிடையே, வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரமலை கள்ளர்கள், மறவர்கள் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்து தடை பெற்றனர். இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசு, பாமக உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பில் ஜாதியை மட்டுமே அடிப்படையாக வைத்து உள் ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், எம்.பி.சி. தொகுப்பை மீண்டும் பிரிக்க வேண்டிய கட்டாயம் திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு மீண்டும் பிரிக்கும்போது, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குரலற்ற சமூகங்களின் சமூக நீதியையும் சீர்தூக்கிப் பார்த்து உரிய வகையில் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
4-ஆக பிரிக்கக் கோரிக்கை: தமிழகத்தில் பெருத்த, அடர்த்தியாக வாழும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்குவது முற்றிலும் நியாயம்தான். இப்போது பிரிக்கப்பட்ட எம்.பி.சி. தொகுப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், அத்தோடு கூடுதல் சதவீதத்தை ஒதுக்கி வன்னியர்களுடன் மேலும் சில சமூகங்களை இணைத்துவிட்டால், உரிய சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேபோல, குரலற்ற சமூகங்களான வலையர், வண்ணார், ஒட்டர், போயர், தொட்டிய நாயக்கர் போன்ற சமூகங்கள் இப்போது 7 சதவீத தொகுப்புக்குள் உள்ளன. இந்த 7 சதவீதத்திலிருந்து 3 சதவீதத்தை தனியாகப் பிரித்து தனித் தொகுப்பாக மாற்றினால்தான் குரலற்ற சமூகங்களுக்கு சரியான சமூக நீதி கிடைக்கும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்னர் எம்.பி.சி. தொகுப்பை பிரித்திருந்தால் உச்சநீதிமன்றம் வரை வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரம் சென்றிருக்காது.
மேலும், குரலற்ற சமூகங்களுக்கும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அரசியல் விழிப்புணர்வு, வாக்கு வலிமை சமூகங்களாக உள்ள வன்னியர்களுக்கு பாமக, திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகளும், பிரமலை கள்ளர், மறவர்களுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க எப்போதும் காத்திருக்கின்றன.
ஆனால், எஞ்சிய சமூகங்கள் ஒரு பகுதியில் அடர்த்தியாக இல்லாததாலும், அவர்களுக்கு வாக்கு வலிமை இல்லாததாலும், அரசியல் பிரதிநிதித்துவமும் கிடைப்பதில்லை; அவர்களின் குரல் அரசியல்வாதிகளின் காதுகளில் விழுவதுமில்லை. வலையர், வண்ணார், பர்வதராஜகுல மீனவர் போன்ற சமூகங்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை.
கல்வியில் பின்தங்கிய இந்தச் சமூகங்களை, கல்வியில் முன்னேறிய சமூகங்கள் கொண்ட 7 சதவீத தொகுப்பில் வைத்துள்ளதால் குரலற்ற சமூகங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, எம்.பி.சி. தொகுப்பில் 7 சதவீதத்தை இரண்டாகப் பிரித்து குரலற்ற சமூகங்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்னியர் உள் ஒதுக்கீட்டில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அந்தச் சிக்கலைக் களைவதுடன், குரலற்ற சமூகங்களையும் கைதூக்கிவிட எம்.பி.சி. தொகுப்பை மீண்டும் முறையாகப் பிரிக்க நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்.