இலங்கையை விட மோசமான நிலைமைக்கு இந்தியா ஆளாக நேரிடும்… சிவசேனா எச்சரிக்கை
பொருளாதார நெருக்கடியால் இலங்கை தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்நாடு சென்ற பாதையில்தான் இந்தியா சென்று கொண்டிருப்பதாகவும் சிவசேனா எச்சரிக்கை செய்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பண வீக்கம், நாட்டின் கடன் சுமை உள்ளிட்டவை காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீதிக்கு வந்து அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது. நிலைமை சீரடைவதற்கு அதிகபட்சம் ஓராண்டு வரை ஆகலாம் என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க, இலங்கையின் நலனில் இந்தியாவை தவிர்த்து உலக நாடுகள் எதுவும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் இலங்கையின் நிலைமை குறித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இலங்கையின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அந்நாடு சென்ற பாதையில்தான் இந்தியாவும் செல்கிறது. பண வீக்கத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கையை விட மோசமான நிலைமைக்கு இந்தியா ஆளாக நேரிடும்.
இந்தியாவில் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. நாட்டின் நலன் கருதி இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வேண்டும். உத்தரப்பிரதேச தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி மத்திய அரசு பேசுவதில்லை. அரசியலையும், தேர்தலையும் தவிர்த்து மத்திய அரசுக்கு எதுவும் முக்கியமில்லை.
என்று தெரிவித்துள்ளார்.