தீ விபத்தில் சிக்கிய குழந்தையை பத்திரமாக மீட்ட காவலர்.. குவியும் பாராட்டு!!
ராஜஸ்தானில் பற்றி எரிந்த கட்டடத்திற்குள் உயிரை பொருட்பாடுத்தாது சென்று குழந்தையை மீட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கடந்த சனிக்கிழமையன்று, ராஜஸ்தான் மாநிலத்தில் நவ் சம்வத்சர் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கராவ்லி பகுதியில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊர்வலம் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் இரு தரப்பிற்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மர்ம நபர்கள் அங்குள்ள கடைகள், வீடுகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
அப்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த, வீட்டிற்குள் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட காவலர் நேத்ரேஷ் சர்மா, சற்றும் தாமதிக்காமல் தனது உயிரை பொருட்படுத்தாது அந்த வீட்டிற்குள் சென்றார். அங்கு சிக்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை காவலர் நேத்ரேஷ் பத்திரமாக மீட்டு வந்தார். மேலும் 4 பேரையும் கலவரத்திலிருந்து அவர் பாதுகாப்பாக மீட்டார்.
இதனிடையே, காவலர் நேத்ரேஷ் சர்மா, துணிச்சலுடன் செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதில், பற்றி எரியும் தீக்குள் இருந்து காவலர் நேத்ரேஷ், குழந்தையை மீட்டு வரும் புகைப்படத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், காவலர் நேத்ரேஷின் செயலுக்காக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அவைரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியதுடன் தலைமைக் காவலராக பதவி உயர்வும் தந்து கௌரவித்துள்ளார்.