சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவையாக வழங்குவது சாத்தியமற்றது.
வாழும் உரிமை, சுகாதார உரிமை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
நாட்டில் அத்தியாவசிய மருந்துகள், உபகரணங்கள் மற்றும் சத்திரசிகிச்சைக்கான பொருட்கள் இல்லாத நிலையில் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவையாக வழங்குவது சாத்தியமற்றது என GMOAவின் செயலாளர் டொக்டர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், போதிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இல்லாவிட்டாலும், சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் அதேவேளை, சுகாதார தொழிற்சங்கங்களை நசுக்கும் வகையில் அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சுகாதார சேவையை இன்றியமையாததாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் போது, தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்களை போதுமான அளவு கையிருப்பில் வைத்திருப்பதையும், மருத்துவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் சூழலை உருவாக்குவதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக, சுகாதார அதிகாரிகள் மருத்துவமனைகளில் பணிபுரியும் முன் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.