ஆயுதங்களை தந்து உதவுமாறு நேட்டோவுக்கு உக்ரைன் கோரிக்கை.
உக்ரைன் மீது ரஷியா 43-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
இதற்கிடையில், ரஷியாவின் ஆக்கிரமிப்பில் இருந்த புச்சா என்ற நகரை உக்ரைன் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. அந்த நகரில் இருந்த பலர் ரஷிய படையினரால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. சாலைகள், பதுங்கு குழிகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கைகள் கட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்த செயலை ரஷியா செய்துள்ளதாகவும் உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
புச்சா நகரில் பெண்கள் ரஷிய படையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாவும் இது இனப்படுகொலை எனவும் உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. புச்சா நகரின் சாலைகளில் மனித உடல்கள் கிடங்கும் புகைப்படங்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரேசில்ஸ் – இல் உள்ள நேட்டோ அமைப்பின் தலைமையகத்திற்கு உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலிபா வருகை வந்தார். அவர் நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் பேசுகையில், எனது நோக்கம் மிகவும் எளிமையானது… அது என்னவென்றால் ஆயுதங்கள், ஆயுதங்கள், ஆயுதங்கள் தான்’
எப்படி சண்டையிடுவது எப்படி வெற்றிபெறுவது என்று எங்களுக்கு தெரியும். ஆனால், உக்ரைன் கேட்டுக்கொண்ட நிலையான மற்றும் போதுமான ஆயுதங்கள் வழங்கப்படவில்லையென்றால் அந்த வெற்றி மிகப்பெரிய தியாகத்துடன் சேர்ந்து தான் வரும். அதிக ஆயுதங்கள் எங்களுக்கு கிடைத்து அது விரைவாக உக்ரைனுக்கு வந்தால் புச்சா நகரில் நடந்த அநீதி போன்று அல்லாமல் அதிக மனித உயிர்கள் பாதுகாக்கப்படும்’ என்றார்.