டெல்லியில் நவராத்திரி விழாவிற்காக இறைச்சி கடைகளுக்குத் தடை: விளக்கம் கோரி நோட்டீஸ்
நவராத்திரிக்காக டெல்லியில் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டது தொடர்பாக விளக்கமளிக்க 2 ஆணையர்களுக்கு தில்லி சிறுபான்மையினர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 9 நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்இந்தியாவை காட்டிலும் வடஇந்திய மாநிலங்களில் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
நவராத்திரியையொட்டி அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட வேண்டும் என டெல்லி தெற்கு, கிழக்கு மேயர்கள் உத்தரவிட்டனர். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மத நம்பிக்கைகளைக் காரணம் காட்டி பிறரின் உணவு உரிமையில் அரசு தலையிடக் கூடாது என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் விளக்கமளிக்கக் கோரி தில்லி சிறுபான்மையினர் ஆணையர் டெல்லி தெற்கு மற்றும் கிழக்கு ஆணையர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.