“கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் தலவாக்கலையில் திரண்ட மக்கள் வெள்ளம் (photos)
“கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்தோடு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த மாபெரும் எதிர்ப்புப் பேரணி தலவாக்கலை நகரில் இன்று நடைபெற்றது.
எதிர்ப்புக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பூண்டுலோயா வழியாகவும், நுவரெலியா வழியாகவும், ஹட்டன் வழியாகவும் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களுடைய எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பிய வண்ணம் தலவாக்கலை நகரை வந்தடைந்தனர்.
அங்கு பிரதான சுற்று வட்டத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார், எம்.வேலுகுமார் ஆகியோருடன் கூட்டம் நடைபெற்ற பிரதான விளையாட்டு மைதானத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றடைந்தனர்.
தொடர்ந்து பிரதான மேடைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ பிரதான மேடையை வந்தடைந்ததும் கூட்டம் ஆரம்பமாகியது. மக்கள் முன்னிலையில் சஜித் அங்கு உரையாற்றினார்.
தலவாக்கலை ஆர்ப்பாட்டத்தில் திகா சூளுரை
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவந்தவர்கள்கூட “கோட்டா வீட்டுக்குப் போ” என இன்று கோஷம் எழுப்புகின்றனர். எனவே, அராஜக ஆட்சியை முன்னெடுக்காமல் சர்வதிகாரியான ஜனாதிபதி கோட்டாபய உடன் பதவி விலக வேண்டும்.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தலவாக்கலையில் இன்று நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பழனி திகாம்பரம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்த அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். மலையகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை தோளில் சுமந்து மீட்டெடுத்த பெருந்தோட்டத் தொழிலாளர்களும், இந்த அராஜக ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்காக வீதியில் இறங்கிவிட்டனர்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரச எதிர்ப்பு அலையே வீசுகின்றது. கோட்டாவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்குப் பெரும்பாடு பட்டவர்களும், அணிதிரண்டு வாக்களித்தவர்களும், ‘கோட்டா வீட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்பதைத் திட்டவட்டமாக இடித்துரைத்து வருகின்றனர். ஆனால், மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல் ஜனாதிபதியும், ஆட்சியாளர்களும் அராஜக ஆட்சியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மக்கள் கொந்தளிப்புக்கு அஞ்சி மலையகத்தில் உள்ள, கொள்ளையற்ற அரசியல்வாதிகள்கூட இன்று அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். அவர்கள் மக்கள் பக்கம் நின்று இந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாளையே அமைச்சுப் பதவி கிடைத்துவிட்டால், மக்களைப் படுகுழிக்குள் தள்ளிவிட்டு ‘பல்டி’ அடித்துவிடுவார்கள். எனவே, இந்த ஜனாதிபதி, அரசு வீடு செல்லும்வரை போராடுங்கள். நாம் உங்களுக்கு துணையாக நிற்போம்” – என்றார்.