டெல்லி அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி.
ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – பிரித்வி ஷா களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரித்வி ஷா பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்தார்.
லக்னோ பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த அவர் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
பின்னர் கிருஷ்ணப்பா கெளதம் பந்துவீச்சில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அவர் 34 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். அவரை தொடர்ந்து பவல் 3 ரன்களிலும் வார்னர் 4 ரன்களிலும் வெளியேற டெல்லி அணி தடுமாற தொடங்கியது.
அதன்பிறகு அணியின் கேப்டன் பண்ட் உடன் சர்ப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். 50 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்த இந்த ஜோடி டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பண்ட் 39 ரன்களுடனும் சர்ப்ராஸ் கான் 36 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் – கேப்டன் கே எல் ராகுல் களமிறங்கினர்.
அதிரடியாக தொடங்கிய குவின்டன் டி காக் டெல்லி பந்துவீச்சாளர்களுக்கு பவர் பிளேவில் சவால் அளித்தார். இந்த சீசனில் டெல்லி அணிக்காக முதல் போட்டியில் பந்துவீசிய நோர்ட்ஜெயின் முதல் 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் டி காக்.
கே எல் ராகுல் 24 ரன்களில் குல்டீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார்.அவரை தொடர்ந்து வந்த லீவிஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தீபக் ஹூடா களமிறங்கினார்.தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டி காக் 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
டி காக் 80 ரன்கள் எடுத்திருந்தபோது குல்டீப் யாதவ் பந்தில் சர்ப்ராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் க்ருனால் பாண்டியா- தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தனர்.
கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு விரட்டிய பாண்டியா அணியின் வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்ய இறுதி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதி ஓவரை வீசிய ஷர்துல் தாக்குர் முதல் பந்திலே தீபக் ஹூடாவை வெளியேற்றினார். பின்னர் களமிறங்கிய இளம் வீரர் ஆயுஷ் படோனி ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அதற்கு அடுத்த பந்தை சிக்சருக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில் லக்னோ அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.