இலங்கை பயணம்; மறுபரிசீலனை செய்ய அமெரிக்க அறிவுறுத்தல்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து இலங்கை செல்லும் தனது நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது. இலங்கை பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அந்த நாட்டு வெளியுறவுத்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மருந்து, அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையும் நிலவுகிறது. எரிபொருள் விற்பனை நிலையங்கள் மளிகை கடைகள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. நாடு முழுவதும் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன’ என கூறப்பட்டு உள்ளது.
இந்த போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியாக நடந்தாலும், சில இடங்களில் போலீசாரின் தடியடி, கண்ணீர் புகை குண்டுவீச்சு சம்பவங்களும் அரங்கேறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் நிலவும் பல மணி நேர மின்வெட்டு, பொது போக்குவரத்து குறைப்பு மற்றும் ரத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கூறப்பட்டு உள்ளது.
இதைத்தவிர கொரோனா பரவலையும் சுட்டிக்காட்டி வெளியுறவுத்துறையின் அறிவிப்பில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதைப்போல இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.