உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க ‘நேட்டோ’ முடிவு.
ரஷியாவின் கவனம் தற்போது கிழக்கு உக்ரைன் பக்கம் திரும்பி உள்ளது. டான்பாஸ் என அழைக்கப்படுகிற இந்த பிராந்தியத்தை முற்றிலுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷியா முயற்சிக்கிறது. தற்போது டான்பாஸ் பிராந்தியத்தின் கிழக்கு பகுதியில் முன்னேற்றம் காண்பதில் ரஷியா கவனம் செலுத்துகிறது.
வடக்கு உக்ரைனிய கிராமங்களில் எதிர்தாக்குதல்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உள்ளூர் மக்களை ரஷிய துருப்புகள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்துகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. மரியுபோல் நகரில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதன் மேயர் தெரிவித்தார். சர்வதேச விசாரணையில் தலையிடும் வகையில் போர்க்குற்ற ஆதாரங்களை மறைக்க ரஷியா முயற்சிக்கிறது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். ரஷிய படைகள் முற்றுகையிட்டுள்ள மரியுபோல், பெர்டியான்ஸ்க், மெலிடோபோல் உள்ளிடவற்றில் இருந்து 5 ஆயிரம் பொதுமக்கள் இப்போது வெளியேறி உள்ளனர்.
நேட்டோ வெளியுறவு மந்திரிகள் கூட்டம், பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் நேற்று நடந்தது. இதற்கு மத்தியில் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, அங்கு நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “எங்களுக்கு தேவை ஆயுதங்கள், ஆயுதங்கள், ஆயுதங்கள்தான். நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் கூறும்போது, “எப்படி போரிடுவது என்பது எங்களுக்கு தெரியும். எப்படி ஜெயிப்பது என்பதுவும் தெரியும். எங்களுக்கு எந்த அளவுக்கு ஆயுதங்கள் கூடுதலாக, விரைவாக வந்து சேருகிறபோது இன்னும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற முடியும்” என கூறினார்.
உக்ரைனுக்கான ஆதரவை வலுப்படுத்த நேட்டோ நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இதை நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “எங்கள் கூட்டணி உக்ரைனை ஆதரிக்கிறது. அனைத்து நட்பு நாடுகளையும் பாதுகாப்பதற்கும், நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். இதில் சந்தேகம் இல்லை. உக்ரைனுக்கு தேவையான அதிக வான்பாதுகாப்பு ஆயுதங்கள், டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், கனரக ஆயுதங்கள், இன்னும் பலவகையிலான ஆதரவையும் வழங்குவோம்” என குறிப்பிட்டார்.
பிரசல்ஸ் நகரில் உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவை சந்தித்து பேசியபிறகு ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் புச்சாவிலும், பிற உக்ரைனிய நகரங்களிலும் நடந்துள்ள படுகொலைகள், சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்களாக பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
ரஷிய படையினருக்கு எதிராக உக்ரைன் படையினர் போர்க்குற்றங்கள் செய்துள்ளாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலோபா கூறினார்.
ஐரோப்பிய யூனியன் நாடுகள், ரஷியா மீது 5-வது பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி வருகின்றன. புச்சா நகரில் நடந்துள்ள படுகொலைகளால் அதிர்ந்து போன ஐரோப்பிய கூட்டமைப்பு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ரஷிய கச்சா எண்ணெய்க்கு தடை விதித்துள்ள நிலையில் அடுத்து அந்த நாட்டின் நிலக்கரி இறக்குமதிக்கும் தடை விதிக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.30 ஆயிரம் கோடி) மதிப்பிலானதாக இருக்கும். நிலக்கரி தடை, ரஷியாவுடனான எரிசக்தி உறவுகளை துண்டிப்பதற்கான தடையை உடைப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.