ஒரு நிபந்தனையின் கீழ் பொருளாதாரத்தை மீட்டெடுக்க SJB தயாராக உள்ளது : எரான் விக்கிரமரத்ன
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணைக்கு பிரதமர் இணங்கினால், அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இடைக்கால அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதற்கு பிரதான எதிர்க்கட்சி தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிப்பது மட்டுமன்றி அரசாங்கத்திற்கு சாதகமான முன்மொழிவுகளையும் முன்வைக்க விரும்புகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு மேல் அமைச்சரவையில் இடம்பெறக் கூடாது என்பதை நான் முன்மொழிய விரும்புகிறேன், என்றார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த இரண்டு நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எரான் விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்றைய தினம் (07) இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் மீதான விவாதத்திற்கு முன்னர், இந்த அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நம்பகத்தன்மையை இழந்துள்ள நிலையில் அரசாங்கம் மீதான அவநம்பிக்கையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியபோது தனது மேசையைத் தட்டி , கைதட்டிய பிரதமர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கெடுபிடியில் இருந்து விடுபட உடனடியாக பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டுமென விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார். இந்த அரசாங்கத்தின் பிரதான பிரச்சினை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மை. நிதி அல்லது பொருளாதாரப் பிரச்சினைக்கு அரசாங்கம் மீது சர்வதேச நம்பிக்கை இல்லை என்றால், அந்த அரசாங்கத்தின் ஆட்சியில் தலைதூக்கும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது.
அனைத்துக் கட்சி மாநாடுகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது, ஆனால் பாராளுமன்றத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்க SJB தயாராக உள்ளது. நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் தேவையான அறிவு இல்லாத போது, குறைந்தபட்சம் பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் தெரிந்த ஒரு நிதி அமைச்சரையாவது நியமிக்க வேண்டும்.
“மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அமைச்சரவையில் இடம் பெற்ற நாடு உலகில் இல்லை. எனவே, இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழப்பை தவிர்க்க முடியாது. எங்களிடம் பொருளாதாரத்திற்கான திட்டம் உள்ளது. இந்த திட்டம் நாட்டில் தற்போது கியூ சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், ”என்று விக்கிரமரத்ன கூறினார்.
இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்ததற்கு ஊழல் ஒரு முக்கிய காரணம். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக பிரித்தானியாவில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனம் பணம் வழங்கியுள்ளதாக பிரித்தானிய நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவையின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியின் மனைவியின் கணக்கில் இரண்டு மில்லியன் டொலர்கள் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதுடன், இந்தப் பணத்தைப் பெற்ற ஜுபேரி என்ற நபர் தற்போது 12 வருட சிறைத்தண்டனையுடன் சிறையில் உள்ளார்.
2013 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கான புதிய கட்டிடத்தை கையகப்படுத்தியதில் 300,000 டொலர்களுக்கு மேல் மோசடி செய்த குற்றத்திற்காக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்த ஜாலிய விக்கிரமசூரிய அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு அதிகாரியும் சாதாரண ஒழுங்கு நடைமுறைகளின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். ஊழல்வாதி ஒருவரை தூதுவராக ஏற்க கனேடிய அரசு மறுத்ததால், ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான ஜாலிய விக்ரமசூரியவை கனடாவுக்கான இலங்கைத் தூதராக நியமிக்க மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை.
ஊழலினால் குவிக்கப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பான அத்தியாயம் அடங்கிய ஐக்கிய நாடுகளின் ஊழல் எதிர்ப்பு சாசனத்தில் இலங்கையும் கையொப்பமிட்டுள்ளது. ஊழல் மற்றும் சொத்துக் குவிப்புக்காக வெளிநாட்டு நீதிமன்றங்கள் இலங்கையர்களை தண்டிக்கும் போது, இலங்கையில், அத்தகைய நபர்களுக்கு எதிராக எந்த விசாரணையும் அல்லது வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஊழலில் இருந்து குவிக்கப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான ஜனாதிபதி செயலணி 2018 இல் நியமிக்கப்பட்டது. இதற்கான சட்டமூலத்தை அந்தக் குழு உருவாக்கியுள்ளது. ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சட்டமாக நிறைவேற்றுமாறு திரு.விக்கிரமரத்ன அரசாங்கத்திடம் கோரினார்.