லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய பதவி பறிப்பு.. ஆளுங்கட்சி பிரமுகர் தற்கொலை.. ஆந்திராவில் பரபரப்பு!!
ஆந்திராவில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய பதவி போன காரணத்தால் ஆளுங்கட்சி பிரமுகர் செல்பி வீடியோ பதிவேற்றம் செய்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் குப்பம் நகரை சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் பார்த்தசாரதி. இவர் அங்குள்ள கங்கம்மா ஆலய கமிட்டி தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் நேற்று செல்பி வீடியோ ஒன்றை பதிவு செய்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வீடியோவில், ஆலய கமிட்டி தலைவர் பதவியைப் பெறுவதற்காக சொந்த கட்சி பிரமுகர்களுக்கு 15 லட்ச ரூபாயும், கோவில் கமிட்டி அமைப்பதற்கு 10 லட்ச ரூபாயும், ஆலய சீரமைப்பு பணிகளுக்காக 10 லட்ச ரூபாயும் ஆக மொத்தம் 35 லட்ச ரூபாய் செலவு செய்தேன்.
இந்த நிலையில் என்னை திடீரென்று பதவி நீக்கம் செய்து விட்டனர் . நடப்பு ஆண்டில் நடைபெற இருக்கும் கோவில் திருவிழாவிற்கு பின் நானே பதவியிலிருந்து விலகுகிறேன் என்று கூறினேன். ஆனால் என்னுடைய பேச்சை கேட்காமல் என்னை பதவி நீக்கம் செய்து விட்டனர். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
என்னுடைய தற்கொலைக்கு நிருபர்கள் 2 பேர், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் ஆகியோரே காரணம்
என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனிடையே, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட பார்த்தசாரதி உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் வெளியிட்டுள்ள செல்பி வீடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறிய கோவிலான குப்பம் கங்கம்மா கோவில் கமிட்டி தலைவர் பதவிக்கு ஒருவர் 35 லட்ச ரூபாய் செலவு செய்தேன் என்று குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.