18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி

நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கும் மேற்பட்டோர் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் கோவிட்-19 பூஸ்டர் டோஸ்களை தனியார் மையங்கள், மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது கோவிட் பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த பட்சத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம். இது ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நடைமுறையில் வரவுள்ளது.

COWIN இணையதள புள்ளிவிவரப்படி நாடு முழுவதும் சுமார் 2.28 கோடி பேருக்கு கோவிட் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என கோவிட் தடுப்பூசி திட்டம் நாடு முழுவதும் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 185.41 கோடி தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 99.41 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 83.71 கோடி பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96 சதவீதத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 83 சதவீதத்தினர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது கோவிட் பரவல் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்திவருகின்றன. தமிழ்நாட்டில் கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் கவனத்துடன் செயல்பட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பூஸ்டர் டோஸ் செலுத்துவதன் மூலம் உடலில் ஆன்டிபாடிகள்கள் அதிகரித்து தொற்றை எதிர்கொள்ளும் திறன் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா, ஹாங்காங்க், தென்கொரியா போன்ற நாடுகளில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுமார் இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரில் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் தவித்துவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.