கடைசி இரண்டு பந்தில் இரண்டு சிக்ஸர்… பரபரப்பான போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 64 ரன்களும், ஷிகர் தவான் 35 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான மேத்யூ வேட் 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த சாய் சுதர்சன், சுப்மன் கில்லுடன் கூட்டணி சேர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின்பும் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 59 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்து, வெறும் 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
இக்கட்டான நேரத்தில் சுப்மன் கில் விக்கெட்டை இழந்ததால், குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இந்த ஓவரின் முதல் பந்திலேயே ஹர்திக் பாண்டியா ரன் அவுட்டானார், இந்த போட்டியில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின் களத்திற்கு வந்த ராகுல் திவாடியா இரண்டாவது பந்தில் ஒரு ரன் அடித்தார், மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்த டேவிட் மில்லர் தேவையே இல்லாமல் நான்காவது பந்தில் 1 ரன் எடுத்ததால், கடைசி இரண்டு பந்தில் 12 ரன்கள் தேவை என்ற நிலை குஜராத் அணிக்கு ஏற்பட்டது.
கடைசி இரண்டு பந்துகளை எதிர்கொண்ட ராகுல் திவாட்டியா அசால்டாக இரண்டு மிரட்டல் சிக்ஸர்கள் பறக்கவிட்டதன் மூலம், குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.