தொடரும் மும்பையின் தோல்வி…! – பெங்களூரு அபார வெற்றி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேவில் இன்று நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர்.
இருவரும் தலா 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த பெர்விஸ் 8 ரன்னிலு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா ( 0), போல்லார்டு (0), ராமந்தீர்ப் சிங் (6 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆனால், மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 37 பந்துகளில் 6 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 68 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளசிஸ் மற்றும் அனுஜ் ராவத் களமிறங்கினர். டூ பிளசிஸ் 16 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த விராட் கோலியுடன் இணைந்து ராவத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47 பந்துகளை சந்தித்த ராவத் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
பொறுப்புடன் ஆடிய விராட் கோலி 36 பந்துகளில் 48 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இறுதியில் பெங்களூரு 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 152 ரன்களை எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்சை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 2 பந்துகளில் 7 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 2 பந்துகளில் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 4 போட்டிகளில் ஆடி 4 போட்டியிலும் தோல்வியை தழுவிய மும்பை புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.