இந்திய அரசு உதவவே இல்ல! கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவனின் தந்தைப் பரபரப்பு புகார்.
கனடாவில் இந்திய மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டு 48 மணி நேரமாகியும் இந்திய அரசோ, கனடா நாட்டு அரசோ எந்த உதவியும் செய்யவில்லை என மாணவரின் தந்தை குற்றம்சாட்டி இருக்கிறார்.
டொராண்டோ நகரில் படித்துக்கொண்டே பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக் வாசுதேவ் (21). இவர் பகுதிநேர பணிக்காக டொராண்டோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் சென்றபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து கருப்பு நிற பை, வெள்ளை நிற காலனி அணிந்த ஒருவர் டொராண்டோ ரயில் நிலையத்தில் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்தியாவை சேர்ந்த அந்த மாணவர் பெயர் கார்த்திக் வாசுதேவ் எனவும் பின்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மாணவன் சுட்டுக்கொல்லப்பட்ட புகைப்படங்களை பார்த்த உத்தரப்பிரதேசத்தை அவரது பெற்றோர் அது தங்கள் மகன் என்பதை உறுதிபடுத்தினர். ஆனால், கொலைக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து டொராண்டோ நகருக்கான இந்திய தூதகரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய மாணவர் கார்த்திக் வாசுதேவ் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கிறோம். கார்த்திக்கின் உடலை இந்தியா கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டு உள்ளது.
இதனை ட்விட்டரில் ரீட்வீட் செய்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், “கொடூரமான இந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சியை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
கார்த்திக் வாசுதேவ் கொலை வழக்கை முடித்து வைக்க சில அதிகாரிகள் முயன்று வருவதாக சந்தேகமடைந்துள்ள அவரது பெற்றோர், கனடாவுக்கு செல்ல விரைந்து விசா வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பேசியுள்ள கார்த்திக்கின் தந்தை, “இந்திய அரசு தரப்பில் ஒரு அதிகாரி கூட எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.” எனக் குற்றம்சாட்டி இருக்கிறார்.