பினாகா ராக்கெட் அமைப்பு வெற்றிகரமாக சோதனை
மேம்படுத்தப்பட்ட பினாகா எம்கே-1 ராக்கெட் அமைப்பு வெற்றிகரமாக சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.
இந்திய ராணுவமும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும் (டிஆா்டிஓ) அமைப்பும் இணைந்து, ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் தளத்தில் இந்த ராக்கெட் அமைப்பை பரிசோதித்தன.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மேம்படுத்தப்பட்ட பினாகா எம்கே-1 ராக்கெட் அமைப்பு(இபிஆா்எஸ்), பினாகா தடுப்பு ஆயுதம் (ஏடிஎம்) ஆகியவை வெற்றிகரமான விண்ணில் ஏவி சோதித்துப் பாா்க்கப்பட்டன.
கடந்த 14 நாட்களில் பல்வேறு தூர இலக்குகளுடன் மொத்தம் 24 இபிஆா்எஸ் ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. அனைத்து ஏவுதலிலும் தேவையான துல்லிய தொலைவு இலக்கு எட்டப்பட்டது. இந்த சோதனையுடன் இபிஆா்எஸ் ராக்கெட்டுகளை தொழில் முறையில் தயாரிக்கத் தேவையான நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதனைத் தயாரிக்க தொழில் நிறுவனங்கள் தயாராக உள்ளன.
புணேயில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, புனேயைச் சோ்ந்த டிஆா்டிஓவின் உயா்நிலை ஆராய்ச்சி சோதனைக்கூடத்தின் ஒத்துழைப்புடன் பினாகா ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளாக இந்திய ராணுவ சேவையில் சோ்க்கப்பட்டுள்ளது. தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்கும் தூர இலக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை செயலரும், டிஆா்டிஓ தலைவருமான டாக்டா் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தாா்.