மின்வெட்டு காரணமாக செல்போன் வெளிச்சத்தில் பிரசவம் – ஆந்திரா மருத்துவமனையில் அவலம்
மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை காரணமாக கர்ப்பிணி ஒருவர் செல்போன் டார்ச் லைட் மூலம் குழந்தை பெற்ற சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகபள்ளி மாவட்டத்தின் அருகே உள்ள நர்சிபட்டினத்தில் என்டிஆர் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி கர்ப்பிணி ஒருவருக்கு செல்போன் டார்ச் வெளிச்சம் மற்றும் மெழுகுவர்த்தி மூலம் பிரசவம் பார்த்த அவலம் அரங்கேறியுள்ளது. அன்றைய தினம் மருத்துவமனையில் சுமார் எட்டு மணிநேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பெண் டார்ச் வெளிச்சத்தின் உதவியுடன் குழந்தை பெற்றுள்ளார். நல்வாய்ப்பாக தாயும் சேயும் தற்போது நலத்துடன் உள்ளனர். இந்த விவகாரம் ஆந்திரப் பிரதேசத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் தெலங்குதேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு இந்த விவகாரம் தொடர்பாக கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மின்தடைகளுத்து யார் பொறுப்பு. மாநிலத்தில் மின்சாரம் இல்லாதது பொது மக்களை பெருமளவில் பாதித்துள்ளது. கர்ப்பிணிக்கு ஏற்பட்ட இந்த அவலத்திற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்வார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தொடர் மின்தடை காரணமாக டீசல் ஜெனரேட்டரில் மின்சாரம் வழங்கப்பட்டுவந்துள்ளது. தொடர்ந்து நீண்ட நேரம் இயங்கியதன் காரணமாக ஜெனரேட்டரும் பழுதடைந்து இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் வேறு வழியின்றி இந்த முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கர்ப்பிணியின் கணவர் கூறுகையில், இப்பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டுவருகிறது என்பதால், மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் என்னிடம் செல்போன்கள் மற்றும் டார்ச் லைட்டுகளை எடுத்து வரச் சொன்னார்கள் என்றார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகள் தங்களின் இயக்கத்திற்கான மின் தேவையை 50 விழுக்காடு குறைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, கடந்த மாதம் மின் கட்டணம் யூனிட்டுக்கு 45 பைசாவில் இருந்து ரூ.1.57 வரை உயர்த்தப்பட்டது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அரசின் இந்த முடிவுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் இடதுசாரிகள் போன்ற எதிர்க்கட்சிகள் மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.