வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் இந்தி மொழியை கட்டாயமாக்குவது ஏன்? மாணவ அமைப்பினர் கேள்வி
வடகிழக்கு மாநிலங்களில் 10ம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாய பாடமாக்கும் முயற்சிக்கு அம்மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் கண்டம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பிற்கு கடுமையான எதிர்புக் குரல்கள் உள்ள நிலையில், வடகிழக்கு மாநிலங்களிலும் அத்தகைய போக்கு காணப்படுகிறது.
முன்னதாக, 37வது நாடாளுமன்ற ஆட்சிமொழிக் கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சரும், நாடாளுமன்ற ஆட்சிக்குழுத் தலைவருமான அமித் ஷா, “அரசு அலுவல் நோக்கங்கள் அனைத்திற்கும் ஒன்றிய அரசு அலுவல் மொழியாக உள்ள இந்தியை பயன்படுத்த நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார். இது, இந்தி மொழியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும். தேசிய ஒருமைப்பாட்டைப் போற்றும் அங்கமாக இந்தி மொழியை மாற்றுவதற்கான நேரம் தற்போது வந்துள்ளது. மத்திய அமைச்சரவைக்கான எழுபது விழுக்காடு நிகழ்ச்சி நிகழ்ச்சி நிரல் இந்தி மொழியில் தான் தயாரிக்கப்படுகிறது. மற்ற மொழியில் பேசும் மாநில மக்கள், இந்திய மொழியில் பேச வேண்டுமென்றால் ஆங்கிலத்துக்கு மாற்றாக, இந்தி மொழியில் பேச வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், வடகிழக்கு மாநிலங்களை குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, “வடகிழக்கு மாநிலங்களில் 22,000 இந்தி மொழி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், வட கிழக்கின் ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் மொழி வழக்கை தேவநாகரி வரி வடிவில் மாற்றியுள்ளனர். இது தவிர வடகிழக்கு மாநிலங்களின் அரசுகள் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயமாக்க ஒப்புக்கொண்டுள்ளன” என்று தெரிவித்தார்.
அமித் ஷாவின் இந்த கருத்துக்கு வடகிழங்கு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அசாம் கலாச்சாரம் மற்றும் மொழிக்காக தொடர்ந்து குரல்கொடுக்கும் அசாம் சாகித்திய சபா இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “அசாமி மற்றும் பிற பழங்குடி மொழிகளை வளர்க்க மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு இந்தியாவின் பழங்குடி மற்றும் பூர்வீக மொழிகளின் இருண்ட எதிர்காலத்தை காட்டுகின்றன. பத்தாம் வகுப்பு வரை இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளது.
அசாம் மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் இதுகுறித்து கூறுகையில், ” அரசியல் அமைப்பு சட்டத்தின் படி கல்வி தொடர்பான விசயங்களில் மாநில அரசுகள் தான் கவனம் செலுத்தி வருகின்றன. ஆங்கிலத்துக்கு மாற்றாக, இந்தி மொழியில் பேச வேண்டும் என்று கூறுவது எங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்தை அழிக்கும் செயல்” என்று தெரிவித்தார்.
இந்தி மொழி திணிக்கும் போக்கு ஆரோக்கியமற்றது என்று வடகிழக்கு பிராந்தியங்களின் மாணவ அமைப்பினர் (NESO) தெரிவித்தனர். இந்தியா என்பது பல்வேறு அடையாளங்கள், மொழிகள், கலாச்சாரங்களை கொண்டுள்ளது. இதை, ஒற்றைப்படுத்த முடியாது. கட்டாயம் என்ற பெயரில் இந்தி மொழியை பொதுமைப்படுத்தகே கூடாது. மத்திய அரசின் இந்த துரித மொழித் திணிப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அமித் ஷா தனது உரையில் வடகிழக்கு மாநிலங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய தேவையென்ன? தென்மாநிலங்களில் மொழித் திணிப்புக்கு எதிரான கலகக் குரல்கள் வலுவாக உள்ளன. அதனால், வடகிழக்கு மாநிலங்கள் எளிதான சுமை என்று மத்திய அரசு கருதுகிறது போலும்” என்று அந்த அமைப்பின் தலைவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.