மக்களே அலெர்ட்.. 4 நாள்கள் தொடர் விடுமுறை.. 1000 சிறப்பு பேருந்துகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு
தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி உட்பட தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருகிறது. ஒட்டி, பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி உட்பட தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர திட்டமிடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 14-ம் தேதி தமிழ்புத்தாண்டு. 15-ம் தேதி புனித வெள்ளி அதனைத்தொடர்ந்து சனி , ஞாயிறு விடுமுறை தொடர்ந்து வருகிறது. பண்டிகை மற்றும் சிறப்பு தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் பொதுமக்களின் பயணத் தேவை அதிகரிக்கும்.
பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர தமிழக அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக நாள்தோறும் 2500 அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக ஆயிரம் அரசுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் மற்ற பேருந்துகளுக்கு முன்பதிவு தேவையில்லை என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.