அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் : சசிகலா வழக்கில் இன்று தீர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதற்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி ஓ.பி.எஸ் மற்றும் இபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2016- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில் கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சசிகலா, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கட்சியின் விதிகளுக்கு புறம்பானது என உத்தரவிடக்கோரியும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சசிகலாவின் இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தனர். சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்சநீதிமன்றமும்,டெல்லி உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிராகரிப்பு மனுக்களின் மீது சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி ஏப்ரல் 8-ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் நீதிபதி ஸ்ரீதேவி அன்று விடுப்பில் சென்றதால் அவரிடம் பட்டியலிடப்பட்ட வழக்குகள் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன.

இந்நிலையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரின் மனுக்களின் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

Leave A Reply

Your email address will not be published.