மழை எதிரொலி.. நாகையில் 1- 9 வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
நாகை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை காரணமாகவும், தற்பொழுது பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 1 முதல் 9 வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தமிழக வடஇலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைப் பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது. இதன்தொடா்ச்சியாக நாகை, நாகூா், வேளாங்கண்ணி, கீழ்வேளூா், திருக்குவளை திட்டச்சேரி உள்ளிட்ட
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசான இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கன மழை எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் 1 முதல் 9 வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார். கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்திருந்த நிலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.