இடைக்கால அரசுக்குப் பின்னடிக்கும் கோட்டா! – இன்றைய சந்திப்பில் பேசவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் முக்கியமான விடயங்கள் எதுவும் பேசப்படவில்லை என்று முன்னாள் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.
இடைக்கால அரசு தொடர்பில் உறுதியான கலந்துரையாடல் இடம்பெறாமல் சந்திப்பு முடிவடைந்தது என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரம் அரசில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி இன்றிரவு சந்தித்தார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசை அமைக்குமாறு ஜனாதிபதியை நிர்ப்பந்திப்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பகல் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.