முதல் முறையாக தன்னைத் தானே அவுட் ஆக்கிக் கொண்ட அஷ்வின்.
ஐ.பி.எல்-ன் பதினைந்தாவது சீசனில் சாம்பியன்கள் சென்னை, மும்பை தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் தோற்று, முதல் வெற்றிக்குத் திணறிக் கொண்டிருக்கும் வகையிலான பல திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் நூற்றாண்டுக் கணக்கான வரலாறு கொண்ட கிரிக்கெட்டில், அரிதான ஒரு சம்பவம் தற்போது ஐ.பி.எல்-ல் லக்னோ ராஜஸ்தான் அணிகள் மோதிவரும் ஆட்டத்தில் நடந்தேறி இருக்கிறது.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி பத்து ஓவர்களில் 67 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழக்க, ஆறு பேட்ஸ்மேன்களை மட்டுமே வைத்திருந்த ராஜஸ்தான் அணி, ரியான் பராக்கை பதுக்கிவிட்டு, அஷ்வினை களமிறக்கியது.
அஷ்வினும் மிகச்சிறப்பாக ஒன்பது ஓவர்கள் ஹெட்மயருக்கு ஒத்துழைப்பு தந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். ஆனால் கடைசி ஓவரில் ஆட்டமிழக்காத அஷ்வின், ரியான் பராக் பேட்டிங்கிற்கு வருவதற்காக, ரிடையர்ட் அவுட்டாகி வெளியே சென்றார். அதாவது இது யாரும் அவுட் செய்யாது அவுட்டாவது. ரிடையர்ட் ஹர்ட் என்றால் காயத்தால் வெளியேறுவது.
இப்படியான ரிடையர்ட் அவுட் சம்பவம் முதலில் நடந்தது, 1866-ஆம் ஆண்டில் சஸ்சக்ஸ், எம்.சி.சி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் நிகழ்ந்தது. 140 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இந்த ரிடையர்ட் அவுட் சம்பவம் 2001-ல் பங்களாதேசிற்கு எதிரான ஆட்டத்தில் இருமுறை அப்போதைய கேப்டன் ஜெயசூர்யாவால் நடந்தது.
முதலில் இரட்டை சதமடித்த மரவன் அட்டபட்டை அழைத்தார், பின்பு 150 ரன்கள் அடித்திருந்த மஹேல ஜெயவர்த்தனாவை அழைத்தார்!