பிகாரில் களவு போன பாலம்: வழக்கை விசாரித்த காவல்துறைக்கு கிடைத்த அதிர்ச்சி
பிகார் மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் அர-சோனே கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த 60 அடி நீள இரும்புப் பாலம் காணாமல்போன சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
பிகாரில் இரும்பு பாலத்தை திருடிச் சென்ற எட்டுபேரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும், சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்களும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் கேட்டறிந்ததில் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த வாரம் இப்பகுதியில் நடந்த ஒரு திருட்டுச் சம்பவம், நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்திருக்கும் ஒரு படத்தில், கிணற்றைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் கொடுப்பார். அது போல, அப்பகுதி மக்கள் பாலத்தைக் காணவில்லை என்று புகாரளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கால்வாயைக் கடக்க சிமெண்ட் பாலம் கட்டப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த அந்த இரும்பு பாலம் இப்படி ஒட்டுமொத்தமாக களவு போகும் என்று அப்பகுதி மக்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அதாவது, கடந்த வாரம் ஒரு நாள் காலையில், சுமார் 4 – 5 பேர் (மாநில நீர்வளத்துறையைச் சேர்ந்த ஒரு சிலரும் அதில் அடக்கம்) அமியாவர் கிராமத்தில் உள்ள அந்த பாலத்துக்கு அருகே வேலை செய்து கொண்டிருந்தனர். புல்டோஸர் மற்றும் பேட்டரி விளக்குகள் உள்ளிட்டவை எடுத்து வந்து மிக அந்த பாலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதைப் பார்த்த மக்களும் பாலத்தை அகற்றும்படி, நீண்டநாளாக வைத்த தங்களது கோரிக்கை நிறைவேறுகிறது என்று மகிழ்ச்சி அடைந்தனர்.
இப்படியே தொடர்ந்து மூன்று நாள்கள் வேலை நடந்தது. காலை 7 மணிக்கெல்லாம் வேலை தொடங்கிவிடும். பாலத்தின் இரும்புத் தூண்கள் அனைத்தும் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு பழைய இரும்புப் பொருள்கள் கடையில் போடப்படும்.
இதில் யாருக்குமே துளியளவும் சந்தேகம் வரவில்லை என்கிறார்கள் அப்பாவி கிராம மக்கள். காலையில் வீட்டை விட்டு வெளியே வரும் பலரும் இவர்கள் பணியாற்றுவதைப் பார்க்காமல் கிராமத்திலிருந்து வெளியே செல்ல முடியாது. விவசாயத் துறையில் பகுதிநேரமாக பணியாற்றும் நபர் ஒருவர் பாலத்துக்கு அருகே மேற்பார்வையில் ஈடுபட்டதாலும், மக்கள் அவரிடம் பேசிய போது பாலத்தை அகற்ற அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதற்கிடையே, 75 சதவீத பாலம் அகற்றப்பட்ட நிலையில், பாலத்தின் மிச்ச பகுதி பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்தது. இது குறித்து புகார் தெரிவிக்க நீர்வளத்துறையை கிராம மக்கள் தொடர்பு கொண்டு பேசிய போதுதான், பாலத்தை அகற்ற அரசு சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
பின்னர், இது குறித்து அப்பகுதி நீர்வளத் துறை துணை பொறியாளர் புகாரளித்து, பல்வேறு தகவல்களை வைத்து 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.