கால் இல்லை என்றால் என்ன?’ நீச்சலில் இரண்டு கின்னஸ் சாதனை. எகிப்து நீச்சல் வீரரின் கதை.
மோட்டார் சைக்கிள் விபத்தில் காலை இழந்த எகிப்திய நீச்சல் வீரர், நீச்சலில் இரண்டு கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார்.
முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இவரின் கதை ஓர் உதாரணம்.
எகிப்தின் கிசா(GIZA) என்ற நகரைச் சேர்ந்த ஒமர் ஹெகாசி(OMAR HEGAZY) என்ற 31 வயதான நீச்சல் வீரர். நீச்சலில் சாதனை படைக்க வேண்டும் என்ற கனவுடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஆனால் அவருக்கு 25 வயதாக இருக்கும்போது எதிர்பாராதவிதமாக 2015-ல் நடந்த மோட்டர் சைக்கிள் விபத்து ஒன்றில் தனது ஒரு காலை இழந்தார்.
இதையடுத்து பல மாதங்கள் நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த ஒமர், கால்களை இழந்தும் கின்னஸ் சாதனைகள் படைத்த ‘டேரீன் பார்பர்(Dareen Barbar), ‘பைசல் அல் மொசாவி (Faisal Al Mosawi)’ போன்றோர்களின் வாழ்க்கைக் கதைகளைப் படிக்கத் தொடங்கியுள்ளார்.
இதன் மூலம் தனது வாழ்க்கையில் நம்பிக்கைப்பெற்று நீச்சலில் சாதனை படைக்கும் தன் கனவை மீண்டும் தொடர்ந்துள்ளார்.
பின்னர் அயராது பயிற்சி மேற்கொண்ட அவர், கடந்த மார்ச் 23-ல் ஒரே மூச்சில் 56.48 மீட்டர் (185 அடி மற்றும் 4 அங்குலம்) தூரம் வரை நீந்தி கின்னஸ் சாதனை படைத்தார்.
பின்னர், ஒரு துடுப்பைப் பயன்படுத்தி 76.7 மீட்டர் (251 அடி மற்றும் 7.68 அங்குலம்) தூரத்தை எட்டி இரண்டாவது கின்னஸ் படைத்து, மிக நீண்ட தூரம் நீருக்கடியில் ஒரே மூச்சில் நீந்தியது (LA1) மற்றும் மிக நீண்ட தூரம் துடுப்புகளுடன் (LA1) நீருக்கடியில் நீந்தியது என இரண்டு கின்னஸ் சாதனைகளைப் படைத்தார்.
இது பற்றிக் கூறியுள்ள அவர்,
“ஆரம்பத்தில் எனது உந்துதலின் ஆதாரம் என்னவென்றால், இதற்கு மேல் என்னிடம் இழக்க எதுவும் இல்லை என்ற உணர்வுதான். வாழ்க்கையில் விரக்தியாகவும் கோபமாகவும் இருந்தேன். என் கோபத்தையும் விரக்தியையும் வெளியேற்ற ஒரு வழியைக் கண்டுபிடித்தேன்.அது என்னை உண்மையிலேயே சுதந்திரமாகவும் திறமையாகவும் உணரச்செய்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “என்னுடைய இந்த கின்னஸ் உலக சாதனைப் பட்டங்கள் மற்றவர்களுக்கு உத்வேகம் தருவதாகவும், அற்புதம் உங்களுக்கு அருகில் எங்கோ இருக்கிறது என்பதை நினைவூட்டுவதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் உங்கள் கண்களை நம்பிக்கையுடன் திறக்க வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.