அமேசான் மூலம் கஞ்சா விற்பனை செய்த வழக்கு: சிறப்பு அதிரடி படைக்கு மாற்றிய மத்தியப் பிரதேச அரசு
குண்டூசி முதல் டூவீலர் வரை விற்பனை செய்யப்படும் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படும் திடுக்கிடும் தகவல் கடந்த ஆண்டு டிசம்பர் வெளியானது. மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் அமேசான் மூலம் கஞ்சா சப்ளை செய்யும் கும்பல், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிடிபட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் விற்பனையாளராக பதிவு செய்திருந்த நிறுவனம் தான் இதற்கு காரணம் என்று போலீசார் கண்டறிந்தனர். விசாரணையின் போது அமேசான் தரப்பில் ஒத்துழைப்பு ஏதும் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இந்திய இயக்குனர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் சுமார் 8 மாதங்களாக இந்த குற்றச் செயல் நடந்து வருவதாக சந்தேகித்துள்ள போலீசார், ரூ.1 கோடி மதிப்புள்ள 600 முதல் 700 கிலோ கஞ்சா நாடு முழுவதும் சப்ளை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கின் மூலம் திருப்புமுனை ஏற்படுத்திய, பிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான மனோஜ் குமார் சிங், திடீரென பணி மாறுதல் செய்யப்பட்டார். ஒரு வருடத்துக்கு முன் பிந்த் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்ட அவர், திடீரென தலைநகர் போபாலில் உள்ள போலீஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சைலேந்திர செளகான் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டார். கஞ்சா வழக்கை விசாரித்து வந்த மாவட்டக் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டதற்கு அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை தொடக்கம் முதல் அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தீவிரமாக கவனித்துவருகிறது. அமேசான் நிறுவனத்துக்கு எதிர்ப்புகளையும் பதிவு செய்துவருகிறது. இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்த வழக்கை சிறப்பு அதிரடிப் படைக்கு மத்தியப் பிரதேச அரசு மாற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.