மூவின மக்களும் ஒன்றிணைந்து கோட்டாவை வீட்டுக்கு விரட்டுங்கள்! – பொன்சேகா வேண்டுகோள்
“கொழும்பு – காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இளையோர்கள் தொடர்ந்து முன்னெடுத்துவரும் போராட்டம் உன்னதமானது. இந்தப் போராட்டத்தில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு விரட்டியக்க வேண்டும்.”
– இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“காலிமுகத்திடல் வரலாறு காணாத இடமாக மாறி வருகின்றது. ஜனாதிபதிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் இளையோர்கள் கொதித்தெழுந்து போராடி வருகின்றனர்.
ஆனால், வெட்கம் கெட்ட ஜனாதிபதி பதவி விலகாமல் இருக்கின்றார். பிரதமரும் பதவி விலகப் பின்னடிக்கின்றார். அதனால் அரசும் கலையாமல் இருக்கின்றது.
‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷம் காலிமுகத்திடலில் மட்டுமன்றி நாடெங்கும், உலகெங்கும் ஒலிக்கின்றது.
பதவி ஆசை பிடித்து நாட்டை அதலபாதாளத்துக்கு தள்ளிவிட்ட ஜனாதிபதியையும், அரசையும் மூவின மக்களும் ஒன்றிணைந்து வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்” – என்றார்.