பஞ்சாப் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி.
15வது ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 70 ரன்களும், மாயன்க் அகர்வால் 52 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜித்தேஷ் சர்மா 30* ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா (28) மற்றும் இஷான் கிஷன் (3) ஆகியோர் பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.
இதன்பின் களத்திற்கு வந்த பெர்வீஸ் 49 ரன்களும், திலக் வர்மா 36 ரன்களும் எடுத்து கொடுத்தனர். இதன் பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான ஆட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 28 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
சூர்யகுமார் யாதவ் களத்தில் இருந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி அசால்டாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 19வது ஓவரை பவுண்டரியுடன் துவங்கிய சூர்யகுமார் யாதவ் அந்த ஓவரின் 3வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். சூர்யகுமார் யாதவிற்கு பிறகு பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஓடியன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.