தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள்

தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சிககள் இன்று மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதனை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஆளுநர் அதிகார மையமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது போன்ற காரணங்களை பட்டியலிட்டு, ஆளுநரின் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதேபோல, தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது, தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆளுநரின், தேநீர் விருந்து அழைப்பை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தினை, புறக்கணிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இதேபோன்று, ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.