டி20 உலககோப்பை வாய்ப்பும் பறிபோகும் நிலையில் சி.எஸ்.கே வீரர் தீபக் சஹார்.
கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடரில் சென்னை அணி சற்று மோசமான துவக்கத்தை பெற்றுள்ளது என்று கூறலாம்.
ஏனெனில் இதுவரை சென்னை அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்த சென்னை அணியானது இறுதியாக நடைபெற்று முடிந்த பெங்களூர் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதன் காரணமாக முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது.
ஆனாலும் இன்னும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதில் சில சிக்கல்கள் உள்ளது என்றே கூறலாம். இப்படி சென்னை அணியின் அடுத்தடுத்த தோல்விகளுக்கு பல காரணங்கள் உள்ளன.
அதில் முக்கிய காரணமாக சென்னை அணியில் இந்த ஆண்டு நம்பிக்கை நட்சத்திரமாக அதிக விலைக்கு 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட தீபக் சாகர் அணியில் இடம் பெறாதது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது என்றே கூறலாம்.
ஏனெனில் வேகப்பந்து வீச்சாளரான இவர் துவக்க ஓவர்களிலேயே அதாவது பவர்பிளே ஓவர்களில் இருபுறமும் பந்தினை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உடையவர். அதன் காரணமாகவே அவர் மீது நம்பிக்கை வைத்து பெரிய தொகைக்கு சி.எஸ்.கே அவரை மெகா ஏலத்தின் போது இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் கடைசி போட்டியில் விளையாடியபோது காயம் ஏற்பட்டதன் காரணமாக தீபக் சாகர் இந்த ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது. அதோடு அவர் தொடர்ந்து பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தீபக் சாகர் சிகிச்சையின்போது மேலும் ஒரு காயம் ஏற்பட்டதன் காரணமாக ஒட்டுமொத்தமாக இந்த ஐபிஎல் தொடரை தவற விடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. அந்த வகையில் தீபக் சாஹருக்கு ஏற்பட்டுள்ள புதிய காயம் குணமடைய இன்னும் நான்கு மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் t20 உலகக் கோப்பை தொடரிலும் அவர் இடம்பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக மிகப்பெரிய சிக்கலை தீபக் சாஹர் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.