இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் – பாலஸ்தீனர்கள் இடையே மோதல்.
மத வழிபாட்டுத்தளம் அருகே இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலில் ஜெருசலேம் பகுதியில் உள்ள டெம்பிள் மவுண்ட் பகுதி இஸ்லாம் – கிருஸ்தவம் – யூதம் ஆகிய 3 மதங்களின் புனித இடமாக உள்ளது. இஸ்லாமிய மத வழிபாட்டு தளமான அல்-அக்ஸா மசூதி இங்கு உள்ளது. கிருஸ்தவ மதத்தின் புனித தளமும், யூத மதத்தின் புனித தளமும் இந்த டெம்பிள் மவுண்ட் பகுதிலேயே அமைந்துள்ளது.
இதனால், இந்த இடம் மூன்று மதங்களுக்கும் முக்கியமான இடமாக கருத்தப்படுகிறது. அதேவேளை, இந்த பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் அரங்கேறுவது வழங்கம்.
இஸ்லாமிய மதத்தினரின் புனித மாதமான ரமளான் மாதம் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக இஸ்ரேலியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா இஸ்லாமிய மத வழிபாட்டுதளத்தில் பாலஸ்தீனியர்கள் இன்று காலை வழக்கமான வழிபாடு செய்தனர். வழிபாடு நடைபெற்ற பின்னர் மதவழிபாட்டுதளத்தை விட்டு வெளியே வந்த பாலஸ்தீனியர்களுக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய படையினருக்கும் மோதல் ஏற்பட்டது.
அங்கு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைகுண்டுகள், ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர்.
இருதரப்பிற்கும் இடையே நடந்த இந்த மோதலில் பாலஸ்தீனர்கள் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு இதே அல்-அக்ஸா மத வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய படையினருக்கும் இடையே நடந்த மோதல் போரில் முடிந்தது. 11 நாட்கள் நடந்த இந்த போரில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனை, மேற்கு கரையில் மொத்தம் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.