முதல்வர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லாதது வருத்தமளிக்கிறது.. அண்ணாமலை
தமிழ் மொழியை இணைப்பு மொழியாக்க தமிழக அரசு என்னென்ன முயற்சி எடுக்க வேண்டும் என்று பாஜக சொல்லி 4 நாட்கள் ஆகிறது இதை பற்றி மாநில அரசு இன்னும் வாய்திறக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கவா்னகிரியில் நாளை வீரன் சுந்தரலிங்கம் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்றே கவா்னகிரி வீரன் சுந்தரலிங்கம் மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அண்ணாமலை இன்றே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவா், பெயர் மாற்றத்திற்கு பிறகு தேவேந்திர குல வேளாளர் மக்களின் முழு ஆதரவை பாஜக பெற்றுள்ளது. நமது முதல்வர் ஒரு விஷயத்தில் இரும்பு பிடி பிடித்து நின்று கொண்டிருக்கிறார். மக்களுடைய கருத்துக்களை காதில் கொள்வது கிடையாது. இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து என அனைத்து சமுதாய மக்களுக்கும் அன்பை பரிமாறும் வாழ்த்துக்களை பிரதமர் மோடி தொடா்ந்து தெரிவித்து வருகிறாா்.
நம்முடைய முதல்வர் அனைவருக்குமான முதல்வர் என்று சொல்கிறார். ஆனால், அனைவருக்கும் வாழ்த்து சொல்வது கிடையாது. குறிப்பாக தமிழ் மக்களின் உணர்வு புண்படும்படி சித்திரை ஒன்று, தமிழ் வருடபிறப்பு. இதை ஆண்டாண்டு காலமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அரசு இதை காதில் கொள்வது கிடையாது. நேற்று கூட மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர், முதல்வர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்வார் என்று. ஆனால், முதல்வர் வாழ்த்து சொல்லாதது வருத்தமளிக்கிறது. மக்களின் மனது வேறு மாதிரி உள்ளது. முதல்வரின் மனது வேறு மாதிரி உள்ளது.
அமித்ஷா ஒரு நிகழ்வில் பேசும்போது, இந்தியாவில் மக்கள் அதிகம் பேசும் மொழி இந்தி மொழி என்று சென்செக்ஸ் அடிப்படையில் தெரிவித்திருந்தார். அதிகமாக பேசுகின்ற இந்தி மொழி இணைப்பு மொழியாக இருப்பதில் தவறில்லை என்றும் தெரிவித்திருந்தார். தமிழ் மொழி இணைப்பு மொழியாக இருந்தால் நாம் அனைவரும். சந்தோஷப்படுவோம். ஆனால், தமிழ் மொழி இணைப்பு மொழியாக வர வேண்டும் என்றால் இந்தியாவில் அதிக இடங்களில் தமிழ் மொழி பேசப்படவேண்டும். ஏ.ஆா்.ரகுமான் தெரிவித்த கருத்தில் எந்தவித தவறும் இல்லை.
தமிழ் மொழியை இணைப்பு மொழியாக்க தமிழக அரசு என்னென்ன முயற்சி எடுக்க வேண்டும் என்று பாஜக சொல்லி 4 நாட்கள் ஆகிறது இதை பற்றி மாநில அரசு இன்னும் வாய்திறக்க வில்லை. நிச்சயம் ஒரு காலத்தில் தமிழ் அதிகம் பேசுகின்ற மொழியாக மாறும் அப்போது தமிழ் இணைப்பு மொழியாக வரும் என்றாா்.