நடுவானில் திடீரென தீப்பிடித்த செல்போன் – பீதியடைந்த விமான பயணிகள்!
இண்டிகோ விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது பயணி ஒருவரின் செல்போன் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், நடு வானில் பறந்த கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணியின் செல்போன் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இண்டிகோ விமானத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக விமானப் போக்குவரத்துறை ஆணையம் வெளியிட்டு அறிக்கையில், அசாம் மாநிலம் திபுர்காரிலிருந்து டெல்லி நோக்கி பறந்த 6E 2037 இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவரின் செல்போன் பேட்டரி அதீத வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்தது. செல்போனில் தீப்பிடித்து பொறி பறக்கவே, சக பயணிகள் விமானத்திலிருந்து உதவியாளர்களிடம் தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து விரைந்து செயல்பட்ட உதவியாளர்கள் விமானத்திலிருந்த தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீயை உடனடியாக அணைத்தனர். இதன் காரணமாக விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் அங்கிருந்த பொருள்கள் எதற்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. விமானம் பத்திரமாக டெல்லியில் தரையிறங்கியது என விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இது போன்ற அசாதாரண சூழலில் செயலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என கேபின் குழுவுக்கு உரிய பயிற்சி தரப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மாட்போன் விபத்துக்கான கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. விமானத்தில் செல்போன் தீப்பிடிப்பது இது முதல் முறை அல்ல. 2016ஆம் ஆண்டில் சாம்ஸ்சங்க் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் போன் தீப்பிடித்தது. அதேபோல் கடந்தாண்டு அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் சாம்ஸ்சங்க் கெலக்ஸி ஏ 21 ஸ்மார்ட் போன் தீப்பிடித்தது. கடந்த மாதம் ஒன் பிளஸ் நார்ட் 2 ஸ்மாட்ர் போன்னை அதன் உரிமையாளர் லக்ஷய் வர்மா என்பவர் பயன்படுத்திக் கொண்டிருந்த போதே தீப்பிடித்து வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது மட்டுமல்லாது சில மாதங்களாக எலக்ட்ரிக் வாகனங்களும் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்ல கண்டெய்னிரில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.