‘ராஜபக்சக்கள் அமைச்சரவை’ நாட்டுக்குச் சாபக்கேடு! – கிரியெல்ல.
ராஜபக்சக்கள் அங்கம் வகிக்கும் அமைச்சரவை நாட்டுக்குச் சாபக்கேடாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் எதிரணியின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய வேளை பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பதவியை இராஜிநாமா செய்திருக்க வேண்டும். அப்போதுதான் முழு அமைச்சரவையும் கலைந்திருக்கும். ஆனால், அவர் இன்னமும் பதவியில் இருக்கின்றார். அதேவேளை, வெளிவிவகாரம், நிதி, கல்வி, போக்குவரத்து என நான்கு அமைச்சர்களையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெறும் என்று ஆளும் தரப்பு கருத்துக்களை வெளியிடுகின்றது. அது புதிய அமைச்சரவை அல்ல; அமைச்சரவை மறுசீரமைப்பே ஆகும். சுருங்கக்கூறினால் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
இவ்வாறான நிலைமையில்தான் இந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கவுள்ளது” – என்றார்.