போலி பாஸ்போா்ட்டில் சென்னை வந்த இலங்கை பயணி கைது

இலங்கையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை பரிசோதித்து அனுப்பினர்.

அப்போது தமிழ்நாட்டில் கோவை முகவரியில் பழனிசாமி சுப்பிரமணி (வயது-54) என்ற பெயரில் பயணி ஒருவா் இந்திய பாஸ்போர்ட் உடன் இலங்கையில் இருந்து இந்த விமானத்தில் சென்னை வந்திருந்தாா். குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை ஆவணங்களை பரிசோதித்தபோது, அவருடைய பேச்சு இலங்கை தமிழ் கலந்து இருந்ததால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்து துருவித் துருவி விசாரித்தனர். அதோடு அவருடைய பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டர் மூலமாகவும் பரிசோதித்தனர்.

அப்போது அது போலி பாஸ்போர்ட் என்று தெரியவந்தது. இதையடுத்து இந்த பயணியை குடியுரிமை அலுவலகத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய உண்மையான பெயர் கண்ணதாசன் சுப்பிரமணி, இலங்கையில் கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டிற்கு வந்தார். இங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். அதன்பின்பு இங்கு உள்ள ஏஜெண்டுகள் சிலரிடம் பணம் கொடுத்து, கோவை முகவரியில் இந்த இந்திய பாஸ்போர்ட் வாங்கினாா். இந்த போலி பாஸ்போா்ட் மூலம் கண்ணதாசன் சுப்ரமணி அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், க்யூ பிரிவு போலீசார், மத்திய உளவுப்பிரிவு போலீசாா், மாநில உளவு பிரிவு போலீசார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

இவருக்கு போலி பாஸ்போர்ட் வாங்குவதற்கு இங்கு யார் உதவி செய்தனா்? இவர் இந்த போலி பாஸ்போா்ட் மூலம் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்துள்ளாா்? இவா் தமிழ்நாட்டில் எங்கு தங்கியிருக்கிறார்? போன்ற விவரங்களை சேகரித்தனர். அதன்பிறகு நேற்றிரவு கண்ணதாசன் சுப்ரமணியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் அவரை கைது செய்து மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.